
தமிழ்ப் படங்கள் கேரளாவில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெறும் போது மலையாள திரையுலகம் கடுமையான அவஸ்தைக்குள்ளாகும். நேரடி மலையாளப் படங்களுக்கு இல்லாத ஆதரவு தமிழ்ப் படங்களுக்கு கிடைக்கும் போது மலையாளிகளால் அதனை சகித்துக் கொள்ள முடிவதில்லை. ஒருவகையில் இது நியாயமும்கூட.
மலையாளப் படங்களைவிட தமிழ்ப் படங்களின் வியாபார எல்லை பெரியது. அதனால் தமிழ்ப் படங்களின் பட்ஜெட் பெரியது. இந்த பட்ஜெட்டில் உருவாக்கும் தரத்தை மலையாள சினிமாக்களால் எட்டிப் பிடிக்க முடிவதில்லை. மேலும் பொழுதுபோக்கு என்ற அம்சத்தை எடுத்துக் கொண்டால் தமிழில் இருப்பதைப் போன்ற வெரைட்டி அங்கு இல்லை. இன்னும் மோகன்லால், மம்முட்டியை நம்பிதான் இருக்கிறார்கள். அவர்களைவிட்டால் ஜெயராம், சுரேஷ் கோபி, திலீப். இளமையான தனி ஹீரோ என்றால் பிருத்விராஜ; மட்டுமே. ஆனால் தமிழில் ரஜினி, கமல் தலைமுறையை கடந்து விஜய், அஜீத், விக்ரம், சூர்யா என்ற அடுத்த தலைமுறை தாண்டி சிம்பு, தனுஷ், கார்த்தி என்று மூன்றாம் தலைமுறையும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுகிறது. இந்த தொடர்ச்சி மலையாளத்தில் இல்லை. அதேபோல் புது முயற்சியுடன் களமிறங்கும் அறிமுக இயக்குனர்களும் மிகக் குறைவு.
இதன் காரணமாகவே தமிழ்ப் படங்களுக்கு கேரளாவில் அமோக ஆதரவு கிடைக்கிறது.
கடந்த தீபாவளிக்கு வேலாயும், 7 ஆம் அறிவு ஆகிவை கேரளாவின் அதிக திரையரங்குகளில் வெளியாகி நேரடி மலையாளப் படங்களைவிட அதிகம் வசூலித்தன. தலா 111 திரையரங்குகளில் இவ்விரு படங்களும் வெளியாகின. இது மம்முட்டி, மோகன்லால் படங்கள் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையை விட அதிகம். இதிலிருந்து தொடங்கியது பிரச்சனை. மலையாளப் படங்கள் நசுக்கப்படுவதால் வெளிமாநில படங்களின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்றனர் தயாரிப்பாளர்கள். அதற்கு ஆதரவாக வரியை அதிகப்படுத்த வேண்டும் என்று கேரள அமைச்சரான கணேஷ் குமார் தெரிவித்தார். இதனை வாஸ் வாங்கும்வரை புதிய மலையாளப் படங்களை திரையிடுவதில்லை என்று திரையரங்குகளை கட்டுப்படுத்தும் கேரள பிலிம் எக்ஸிபிட்டர்ஸ் பெடரேஷன் அறிவித்தது. இதன் காரணமாக 11-11-11 அன்று வெளியாவதாக இருந்த மம்முட்டியின் வெனிசிலே வியாபாரி, மோகன்லாலின் மருபூமியின் கதா ஆகிய படங்கள் டிசம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டன.
பிரச்சனை நாளுக்குநாள் பெரிதாகி வேலாயுதம் படம் ஓடும் திரையரங்கை கேரள யூத் காங்கிரசார் முற்றுகையிடும் அளவுக்கு நிலைமை மோசமானது. பள்ளிகளில் மலையாளத்தை கட்டாயமாக்கும் போது, தியேட்டரில் மட்டும் மலையாளப் படங்களை திரையிடுவதேயில்லை. மலையாளப் படங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். அதே நேரம் வேற்றுமொழி திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார் மாநில யூத் காங்கிரஸ் பிரசிடெண்டான பிசி விஷ்ணுநாத். மலையாள திரைப்படங்களை திரையிடுவதில்லை என்ற சங்கத்தின் முடிவை மாற்றிக் கொள்ளாதவரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் கணேஷ் குமார்.
தமிழ்ப் படங்களால் அதிக வருமானம் என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் தமிழ்ப் படங்களுக்கு எதிரான எல்லா முடிவுகளையும் எதிர்க்கிறார்கள். தமிழ்ப் படங்களால் மலையாளப் படங்கள் பாதிக்கப்படுவதாக கருதும் தயாரிப்பாளர்களும் மற்றவர்களும் இதனை எதிர்க்கிறார்கள். போதாதற்கு 300 சதவீத சம்பள உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மலையாள படவுலகு மட்டுமின்றி தமிழ்ப் படங்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
சிம்பு, தனுஷ் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உண்டு. இவர்களின் படங்கள் நவம்பர் இறுதியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும் வெளியாகின்றன. ஸ்டிரைக் காரணமாக இவர்களின் படங்கள் கேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்டிரைக் தொடர்ந்தால் ராஜாபாட்டை, நண்பன், வேட்டை உள்ளிட்டப் படங்களும் கேரளாவில் வெளியாவது கேள்விக்குறியாகிவிடும். இது தமிழ்ப் படங்களின் வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.