டேம் 999 திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதித்தது ஏன் என்பது குறித்து எழுத்து மூலம் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டேம் 999 திரைப்படத்திற்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து அந்த படத்தின் தயாரிப்பாளர் ஷோகன் ராய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. கங்குலி, ஜே.எஸ். கேஹர் ஆகியோரடங்கிய அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குருகிருஷ்ண குமாரிடம் நீதிபதிகள்,"இந்தியாவுக்கு ஒரு அரசியல் சாசனம்தான் உள்ளது.அனைத்து மாநிலங்களும் அதன் வரம்புக்குள்தான் உள்ளன என்பதால், நீங்கள் (தமிழக அரசு) தனியாக உங்களுக்கென்று ஒரு சட்டத்தை வைத்துக்கொள்ள முடியாது" என்று கூறினார்.
மேலும் டேம் 999 திரைப்படத்தை திரையிட தடை விதித்தது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் எழுத்து மூலம் பதில் தாக்கல் செய்யவேண்டும்" என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக மத்திய அரசு தரப்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் மோகன் ஜெயின், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ஒரு படத்தை திரையிட ஒப்புதல் அளித்துவிட்டால், மாநில அரசு அதனை தடை செய்ய அதிகாரம் ஏதும் இல்லை என்று கூறினார்.
அதே சமயம் தமிழக அரசு தரப்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் குருகிருஷ்ணா, தமிழகத்தில் முல்லைப்பெரியார் அணை விவகாரம் ஓய்ந்து அமைதி திரும்பியுள்ள நிலையில், அப்படத்தை திரையிட்டால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு என்று கூறினார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.