திரைக்கதை மன்னனுக்கு இப்படியொரு சோதனை வந்திருக்கக் கூடாது. தனது மகனை வைத்து அவர் எடுக்க நினைத்த இன்று போய் நாளை வா ரீமேக்கை அவரின் அனுமதியில்லாமல் சுட்டு படமாக்கியதோடு அதனை இல்லை என்றும் சாதிக்கிறார்கள். பொய் சொல்கிறவர்கள் பெரிய இடத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் வேதனை.
சுட்ட விவகாரத்தில் நஷ்டஈடாக பாக்யராஜுக்கு ஐம்பது லட்சம் அளிக்கப்பட்டது என்று சிலர் எழுதப்போக அதை மறுக்கிற கட்டாயம் பாக்யராஜுக்கு. நேற்று மாலை நிருபர்களை இதற்காகவே சந்தித்தார்.
இன்று போய் நாளை வா படத்தின் உரிமை என்னிடம்தான் உள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு, கன்னட, இந்தி கதை உரிமையை நான்தான் விற்றேன். இப்படியிருக்க படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து கதை உரிமையை புஷ்பா கந்தசாமியும், ராம.நாராயணனும் வாங்கியதாக கூறி கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை எடுத்திருக்கிறார்கள்.
இதுபற்றி நீங்கள் அவர்களிடம் எதுவும் கேட்கவில்லையா?
கடந்த 19 ஆம் தேதி ராம.நாராயணனுக்கும், சந்தானத்துக்கும் கடிதம் அனுப்பினேன். பதில் அளிக்கவில்லை. அதனால் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
படத்தின் டைட்டிலில் உங்களுக்கு கிரெடிட் தந்திருக்கிறார்களே...?
நீதிபதியின் அறிவுறுத்தலின் காரணமாகதான் டைட்டிலில் என்னுடைய பெயரை போட்டிருக்கிறார்கள்.
படம் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் போது ரிலீஸை தடுத்திருக்கலாமே?
நான் நடித்து இயக்கிய வேட்டியை மடிச்சுக்கட்டு ஒருநாள் லேட்டாக ரிலீசானதால் பல சோதனைகளை சந்தித்தேன், கண்ணீர்விட்டு அழுதேன். அதுபோன்ற ஒரு நிலைமை எதிரிக்குகூட வரக்கூடாது. அதனால்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை திரைக்கு வரவிடாமல் தடுக்கவில்லை. ராம.நாராயணனும், சந்தானமும் தெரிந்தவர்கள். நாளை ஒருத்தர் முகத்தை இன்னொருத்தர் பார்க்க வேண்டும்.
உங்களுக்கு நஷ்டஈடு தரப்பட்டதாக செய்திகள் வந்திருக்கிறதே...?
இந்தப் பிரச்சனையில் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு ஒரு பெரிய தொகையை எனக்கு நஷ்டஈடாக தந்ததாக எழுதுகிறார்கள். நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனக்கு ஏற்பட்ட பாதிப்பு நாளை மற்றவர்களுக்கும் நடக்கலாம். அதற்காகதான் வழக்கு தொடர்ந்தேன்.
சந்தானம் இது தனது கதை என்கிறாரே...?
கண்ணா லட்டு தின்ன ஆசையா படப்பிடிப்பு நடந்த போது அவர் தினமும் என்னை வந்து பார்த்ததாகவும்தான் எழுதுகிறார்கள். மாப்பிள்ளை விநாயகர் பூஜயில் அவரை பார்த்ததோடு சரி. அதற்குப் பிறகு அவரை சந்திக்கவே இல்லை. ஒரு பேட்டியில் தனது படம் இன்று போய் நாளை வா படத்தின் கதைதான் என்று கூறியிருந்தார். இப்போது பார்த்தால் என் சிந்தையில் உதித்த கதை என்று காமெடி பண்றார்.
உங்கள் அடுத்க்கட்ட நடவடிக்கை...?
படத்தின் கலெக்ஷன் ரிப்போர்ட்டை தர வேண்டும் என்று கோர்ட்டில் கேட்டிருக்கிறேன். என் தரப்பு நியாயத்தை கோர்ட்டில் நிரூபித்த பிறகு எனக்கான நஷ்டஈடை கேட்பேன்.
ராம.நாராயணன், புஷ்பா கந்தசாமி, சந்தானம் மூவரும் செய்தது தெரிந்தே செய்த திருட்டு. இது வெட்கத்துக்குரியது, கண்டிக்கத்தக்கது. பாக்யராஜுக்கான நீதியை நீதிமன்றம் விரைந்து அளிக்க வேண்டும் என்பதே நம்முடைய தரப்பு.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.