இந்த மாதம் கோடை மழை மாதிரி சின்ன பட்ஜெட் படங்கள் மழையாக பொழிந்தன. திரையை தொட்ட மறுநாளே அனைத்துப் படங்களும் மாயமாக மறைந்து, ஏற்கனவே பலவீனமாக உள்ள தமிழ் சினிமாவை மேலும் பதட்டத்துக்குள்ளாக்கின.
இந்த மாதம் சின்னப் படங்கள் என்றால் ஏப்ரலில் தமிழ் சினிமாவை சோதிக்க இருப்பவை பெரிய படங்கள் ஆனாலும் அவற்றில் சாதிக்க போவது ஒரு சிலதே.
ஏப்ரல் 2ஆம் திகதியே நெருக்கடி தொடங்குகிறது. அன்று உதயநிதி தயாரித்து நடித்திருக்கும் நண்பேன்டா, விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம், முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கொம்பன் ஆகிய படங்கள் வெளியாகின்றன.
பட்ஜெட்டை வைத்துப் பார்த்தால் நண்பேன்டா, கொம்பன் இரண்டுமே பெரிய படங்கள். விஜயகாந்தின் மகன் அறிமுகமாகும் படம் என்பதால் சகாப்தத்தை சின்ன படங்களின் பட்டியலில் சேர்க்க இயலாது. பட்ஜெட்டும் பெரிய படங்களுக்கு இணையாக உள்ளது.
நண்பேன்டாவை தயாரித்திருக்கும் உதயநிதியின் ரெட் ஜெயண்டும், கொம்பனை தயாரித்திருக்கும் ஸ்டுடியோ கிரீனும் தமிழக திரையரங்குகள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள். ரெட் ஜெயண்ட் படங்களை தயாரிப்பதுடன், தரமான படங்களை வெளியிடவும் செய்கிறது. சமீபத்தில் வெற்றி பெற்ற, தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தை ரெட் ஜெயண்ட்தான் விநியோகித்தது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள மாஸ் விரைவில் வெளிவரவிருப்பதால் ஸ்டுடியோ கிரீனின் கொம்பனை திரையரங்குகளால் தவிர்க்க முடியாது.
தமிழகத்தில் புதுப்படங்களை திரையிடும் நிலையில் உள்ள சுமார் 800 திரையரங்குகளில் 90 சதவீத திரையரங்குகளை இவ்விரு படங்களே பங்குப் போட்டுக் கொள்ள துடிக்கின்றன. மீதமுள்ளவைதான் சகாப்தத்துக்கு.
இந்த மூன்று படங்கள் தவிர ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி ஒருவருடமாக ரிலீஸுக்கு காத்திருக்கும் பூலோகம் படமும் ஏப்ரல் 2 திரைக்கு வரும் முயற்சியில் உள்ளது. அந்தப் பேடமும் போட்டிக்கு வந்தால் திரையரங்குகளின் எண்ணிக்கை மேலும் குறையும்.
இந்த இரு படங்களில் ஏதாவது ஒன்று வெளியானாலும், வெளியான ஒரு வாரத்திலேயே கணிசமான பின்னடைவு ஏப்ரல் 2 வெளியாகும் படங்களுக்கு ஏற்படும். அதேபோல் ஏப்ரல் 10 வெளியாகும் படங்களும் முழுமையான ஓபனிங்கை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் தமிழ் சினிமா எதிர்கொள்ளும் இந்த நெருக்கடி, அந்த மாதம் முழுவதும் தொடரும் என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.
பெரிய படங்களின் வெளியீட்டை வரையறுத்தல், ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் ஒரு படத்தை திரையிடுவதை கட்டுப்படுத்துதல், சின்ன பட்ஜெட் படங்கள் 10 தினங்களாவது திரையரங்குகளில் ஓடுவதற்கான சூழலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அத்தியாவசிய விஷயங்களில் தமிழ் சினிமா கவனம் செலுத்தவில்லை எனில் ஏப்ரலில் எதிர்கொள்ளப் போகும் நெருக்கடியை இன்னும் மோசமாக வருடம் முழுவதும் எதிர்கொள்ள வேண்டிவரும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.