
தட்பவெப்ப மாற்றத்துடன் தொடர்புடைய புவியியல் மாற்றங்கள் மீத்தேன் வாயுவின் புகையனல் கக்குதலையும் உருவாக்கலாம். இந்த வெப்ப வாயு தற்போது உறைபனியில் திட வடிவத்தில் உள்ளது. மேலும் கடலடிப் படுகையிலும் மீத்தேன் திட வடிவில் உள்ளது. தற்போது காற்றில் இருக்கும் ஒட்டுமொத்த கரியமில வாயுவின் அளவைக்காட்டிலும் உறைபனியடியில் திட நிலையில் உள்ள இந்த மீத்தேன் அளவு பன்மடங்கு அதிகமாகும்.
"தட்பவெப்ப மாற்றங்கள் விண்வெளியையும், கடல்களையும் மட்டும் பாதிப்பதில்லை, பூமியின் மேல்பாறையையும் பாதிக்கிறது. ஒட்டுமொத்த பூமியும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குவது" என்று லண்டன் பல்கலைக் கழக கல்லூரி பேராசிரியர் பில் மெகுவைர் வானிலை மாற்ற விளைவுகள் குறித்த முக்கிய கருத்தரங்கில் விஞ்ஞானிகள் மத்தியில் கூறியுள்ளார்.
"அரசியல் வட்டாரத்தில் தட்பவெப்ப மாற்றத்தின் புவியியல் அம்சங்கள் குறித்து அறியாமல் உள்ளனர்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எரிமலை நிபுணர்கள், நிலநடுக்க ஆய்வாளர்கள், பனிப்பாறை விஞ்ஞானிகள், வானிலை மாற்றம் குறித்த ஆய்வு நிபுணர்கள், நிலச்சரிவு நிபுணர்கள் ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கடந்த கால புவியியல், வானிலை மாற்றங்களின் அடிப்படையில் எதிர்காலத்தை கணிக்கும் ஆய்வுத் தரவுகளை பகிர்ந்து கொண்டனர்.
"பனி உருகிப்போனால், பூமியின் மேல்பரப்பு தட்பவெப்ப மாற்றங்களுக்கு இலக்காகி நிலநடுக்கங்களை உருவாக்கும். இதனால் கடலுக்கு அடியிலும் நிலச்சரிவுகள் ஏற்படும், இந்த கடலடி நிலச்சரிவினால் சுனாமி என்ற ஆழிப் பேரலைகள் ஏற்படும்" என்று மெகுவைர் தெரிவித்தார்.
ஆக்ஸ்போர்ட் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் பைலி பூமியின் மேற்பரப்பு நிறையில் (mass) ஏற்படும் சிறிய மாற்றங்களால் பொதுவாக எரிமலை நடவடிக்கைகள் தாக்கம் பெறும். பனி உருகிய பகுதிகளில் மட்டுமே இது நிகழாது, மாறாக மற்ற பகுதிகளிலும் எரிமலை நடவடிக்கைகள் துரிதமடையும். என்று அந்த கருத்தரங்கில் தெளிவு படுத்தினார்.
எரிமலைகள் வெடிக்கும் போது மிகப்பெரிய அளவில் சாம்பலையும், கந்தகத்தையும், கரியமில வாயுவையும் விண்வெளிக்கு செலுத்துகிறது. சூரிய ஒளி இதனை மீண்டும் பிரதிபலிக்கும் போது சில வேளைகளில் பூமி குளிரடையவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது இரண்டாண்டுகளுக்கே நீடிக்கும். ஆனால் அடிக்கடி எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் புவிவெப்பமடைதலை துரிதப்படுத்தும் அபாயமும் உள்ளது என்று அமெரிக்க எரிமலை ஆய்வு நிபுணர் பீட்டர் வார்ட் இந்தக் கருத்தரங்கில் பேசுகையில் தெரிவித்தார்.
"மனிதனுக்கு முன்னால் தட்பவெப்ப மாற்றங்களை உருவாக்கியது எரிமலைச் செயல்பாடுகள்தான். ஆனால் தற்போது தட்பவெப்ப மாற்றத்தை மனிதன் தன் கையில் எடுத்துக் கொண்டு விட்டான், எரிமலை ஏன் மாற்றங்களை தோற்றுவிக்கிறது என்பதை புரிந்து கொண்டால் என்ன செய்வது என்பதை நாம் நிர்ணயிக்க முடியும்" என்று அவர் மேலும் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
ஆனால் இந்த கருத்தரங்கில் பேசியவர்களெல்லாம், கண்டுபிடிப்புகள் அனைத்தும் கருதுகோள் அளவில் உள்ளது என்பதை குறிப்பிட்டாலும், உலகம் பெரிய அதிர்வுகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கான ஆதாரங்கள் பெருகி வருகிறது என்றும் எச்சரித்தனர்.
நாசா விஞ்ஞானி டோனி சாங் உரையாற்றுகையில், சமீப காலங்களில் ஏற்பட்ட பனிப்பாறை நிலநடுக்கங்களால் பனிப்பாறைகள் மிகப்பெரிய நிலச்சரிவை சந்தித்து கடலுக்கு அடியில் சென்றுள்ளதாக தெரிவித்தார்.
"மேலும் பனிப்பாறை நிலநடுக்கங்கள், கடலுக்கு அடியில் ஏற்படும் மிகப்பெரிய நில நடுக்கங்கள் ஏற்படுத்தும் சுனாமியைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சுனாமியை ஏற்படுத்தும் என்று தங்கள் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது" என்றார்.
இதனால் சிலி, நியூஸீலாந்து, கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் ஆகியவற்றிற்கு அபாயம் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பலதரப்பட்ட சுற்றுச்சூழல் சீரழிவிற்கு கரியமில வாயு வெளியேற்றத்தை மட்டும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போதாது என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.