மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கமல் 50-சில பிளாஷ்பேக்குகள்

ஆக்டோபஸ் அறிவோடும், அமீபாவின் பணிவோடும் இருப்பவர்தான் கமல். ஐம்பதாண்டு கால திரையுலக பயணம் சிலருக்கு மட்டுமே வாய்த்த சிறப்பு. இன்றைய தேதியில் இவருக்காக சிம்சானங்கள் காத்திருந்தாலும், ஒரு காலத்தில் நடைவண்டி கூட இல்லாமல் சிரமப்பட்டவர்தான் கமல்.

சிறுவனுக்கும் வாலிபனுக்கும் இடைபட்ட அந்திப்பொழுது ஏராளமான குழப்பங்கள் நிறைந்தது. சிறுவனாக இருக்கிற வரை கிடைத்த சினிமா வாய்ப்பு வாலிபன் ஆனபின் கிடைக்காமல் போக இன்னும் குழப்பம் அவருக்கு. அந்த நேரத்தில்தான் தியாகராய நகரில் இருக்கும் திரைப்பட தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வீட்டுக்கு போவாராம். வேறொன்றுமில்லை. வாய்ப்பு தேடிதான் இந்த விசிட்.

மிகவும் ஒல்லியாக இருக்கும் கமலை பார்த்து இப்படி ஒல்லியா இருக்கியேப்பா? ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோ, உடம்புல சதை போடும்னு சொல்வார் சின்னப்பா தேவர். ஆனாலும், "தம்பி உன்னை வச்சு நான் படம் எடுக்கிறேன். ஆனால் இப்போ இல்லை. அதுவரைக்கும் என்னோட அட்வான்சா இந்த செக்கை வச்சுக்கோ. எவ்வளவு வேணுமோ பில்லப் பண்ணி எடுத்துக்கோ" என்று ஒரு பிளாங்க் செக்கை கொடுத்தாராம்.

ஆனால் கமல் முதல் ஹீரோவாக நடித்தது தேவருக்காக அல்ல. பாலசந்தருக்காக. அரங்கேற்றம்தான் கமலை முதன்முதலாக ஹீரோவாக்கிய படம். ஆனால் பிளாங்க் செக்கை மறக்காத கமல், அதன்பின் தேவர் தயாரித்த பல படங்களில் நடித்தார்.

பட வாய்ப்பு இல்லாத காலங்களில் கமலுக்கும் அவரது நண்பர் எஸ்.வி.சேகருக்கும் இருந்த ஒரே பொழுது போக்கே திரைப்படங்கள் பார்ப்பதுதான். பஸ்சுக்காக வைத்திருக்கும் பணத்தில் படம் பார்த்துவிட்டு நடந்தே வீடு திரும்புவது இருவருக்கும் பிடித்த விஷயம். மவுண்ட் ரோடில் சினிமா பார்த்துவிட்டு சினிமாவை பற்றி அக்குவேறு ஆணி வேறாக அலசியபடியே வீடு திரும்புவார்களாம் இருவரும். ஓரிடத்தில் வந்து பிரிந்து அவரவர் வீட்டுக்கு போவதுதானே நடைமுறை. ஆனால் எஸ்.வி.சேகரின் வீடு வரைக்கும் பேசிக்கொண்டே வரும் கமல், அங்கிருந்து கிளம்பி போவாராம் தனது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு.

கமலின் அறையில் இருக்கிற ஒரே படம் பெரியாருடையதுதான். இவருக்கும் சென்னைக்குமான உறவில் மிக முக்கியமான இடம் பெரியார் திடல். கருப்பு சட்டையணிந்து இங்கே அவர் பேசியதுடன் ஒரு நாத்திகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். எப்போதிலிருந்து நாத்திகம்? என்றால், "எப்போதிலிருந்து தமிழ் பேச ஆரம்பித்தீர்கள் என்றால் என்ன பதிலோ, அதுதான் இதற்கும்" என்கிறார் கமல்.

கமல் விரும்பி சாப்பிடுகிற இடங்களில் ஒன்று அவரது வீட்டருகே அமைந்திருக்கும் சாம்கோ ஹோட்டல். சில நேரங்களில் அங்கு சாப்பிட வருபவர்கள் கமலின் அலுவலக வாசலில் வண்டியை நிறுத்தினால் செக்யூரிடிகள் கோபப்படுவதில்லை. ஏனென்றால் கமலின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருக்கிறது இந்த ஹோட்டலும். ஒரு பிராமணர் உணவுப்பழக்கத்தை அசைவமாக்கிய பெருமை இந்த ஹோட்டலுக்கு உண்டு.

சாந்தோம் பள்ளியில் எட்டாவது வரைதான் படித்திருக்கிறார் கமல். ஆனால் உலக மொழிகளில் பல அவருக்கு அத்துப்படி. லாங்குவேஜ் வேறு, நாலெட்ஜ் வேறு என்று அடிக்கடி சொல்வது கமலின் வழக்கம்.

கமலின் ஆழ்வார்பேட்டை வீட்டுக்கே வந்து அரட்டையடிக்கிற நண்பர்களில் சுப்பிரமணியும் ஒருவர். இவரது கதை திறமையை கண்டு வியந்து பாரதிராஜாவிடம் கதை சொல்ல அழைத்துப் போனாராம் கமல். இந்த சுப்புரமணிதான் இன்றைய மணிரத்னம்!

கமல் சென்னைக்கு வந்து பிரபல நடிகர் ஆகிவிட்டாலும், அப்பா பரமக்குடியிலேயே இருக்கிறாரே என்ற வருத்தம் இருந்தது. பலமுறை அவரை சென்னைக்கு அழைத்தும் நான் வரலைப்பா என்று கூறிவிடுவாராம் அவர். ஆனால் மகனுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்றால் கூட முடியாமல் அவஸ்தைப்பட்டார் அந்த அப்பா.

அவர் அனுப்புகிற கடிதங்களை வாசகர் கடிதம் என்று நினைத்து கவனிக்காமல் விட்டு விடுவார்களாம். ஒரு முறை கமலின் கையெழுத்திட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றையும் வைத்து அவரது அப்பாவுக்கு அனுப்பி விட்டார்களாம். இதில் மிகவும் அப்செட் ஆன கமலின் அப்பா, தனது இன்னொரு மகனான சந்திரஹாசனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, அதிர்ந்து போனார் கமல். உடனடியாக ஊருக்கு போய் நடந்த விஷயத்தை சொல்லி மன்னிப்பும் கேட்டாராம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.