இன்றைக்கு 30 ஆண்டுகள் கழித்து எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டாலும், எத்தனை ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வந்தாலும், இன்னும் மைக்ரோசாப்ட் தான் முதல் இடத்தில் உள்ளது. இந்த கால கட்டத்தில் ஆலன் மற்றும் பில் கேட்ஸ் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றனர். 2008 ஆம் ஆண்டில் 1800 கோடி டாலர் நஷ்டம் அடைந்த பின்னரும், பில் கேட்ஸ் தொடர்ந்து முதல் பணக்காரராக உள்ளார்.
பில்கேட்ஸ் நிறுவனம் மைக்ரோசாப்ட் வெறும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மட்டும் தயாரிக்கவில்லை. உலகெங்கும் பிரபலமாகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் எம்.எஸ். ஆபீஸ், எக்ஸ் பாக்ஸ் வீடியோ கேம் விளையாட்டு சாதனம், ஸூன் போர்ட்டபிள் மியூசிக் பிளேயர் என இன்னும் பல டிஜிட்டல் சாதனங்களை முதல் முதலாக உருவாக்கி மக்களிடையே விற்பனை செய்து வருகிறது.
இவ்வளவு அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நிதி ஸ்திரத்தன்மை இருந்தும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தான் இறங்கிய அனைத்துத் துறைகளிலும் முதல் இடத்தைப் பெற முடியவில்லை. குறிப்பாக, இன்டர்நெட் சர்ச் இஞ்சின் மார்க்கட்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், என்ன முயன்றும் முதல் இடத்தின் அருகே கூடப் போக முடியவில்லை. இந்த தேடல் இஞ்சின் பிரிவில், கூகுள் முடி சூடா மன்னனாக மட்டுமல்ல, பேரரசனாக இன்றும் இயங்குகிறது. இந்த பிரிவைப் பொறுத்தவரை கூகுள் 60% மார்க்கட்டை மிகக் கெட்டியாகப் பிடித்து அடுத்த நிறுவனமான யாஹூவை எங்கோ தள்ளி வைத்துள்ளது.
இந்த வேளையில் தான் கூகுள் நிறுவனத்தின் சர்ச் இஞ்சினுக்குச் சரியான சவாலைத் தர வேண்டும் என்ற எண்ணத்துடன், தன்னுடைய லைவ் சர்ச் (Live Search) இஞ்சின் இடத்தில் பிங் (Bing) என்ற பெயரில் புதிய சர்ச் இஞ்சினைக் கொண்டு வந்தது. ஆனால் இதனை சர்ச் இஞ்சின் என மைக்ரோசாப்ட் அழைக்கவில்லை. இங்கு அதன் சில சிறப்பம்சங்கள் மற்றும் பிங் எந்த வகையில் சிறந்தது என்று மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
மைக்ரோசாப்ட், பிங் சாதனத்தை ஒரு டெசிசன் இஞ்சின் (Decision Engine)என அழைக்கிறது. சென்ற ஜூலையுடன் முடிந்த காலத்தில், மொத்தம் 24 கோடி இன்டர்நெட் வெப் சைட்டுகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இணைய தளங்கள் இருக்கையில், தேடுதல் இஞ்சின்களின் பணி நமக்கு ஓர் அத்தியாவசியத் தேவையாகும். ஒரு சர்ச் இஞ்சின் பக்கம் செல்லாமல், இணையத்தில் தகவல்களைத் தேட முடியுமா என்று ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்தால், நமக்கு இதன் முக்கியத்துவம் தெரியும். சர்ச் இஞ்சினுக்கும் டெசிசன் இஞ்சினுக்கும் என்ன வேறுபாடு? மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்த வரை, தேடல் ஒன்றை மேற்கொள்கையில் தேவையில்லாமல் கிடைக்கும் குப்பை தளங்களை ஓரளவிற்காவது தடுக்க வேண்டும் என எண்ணுகிறது. இதன் மூலம் தேடும் நமக்கு வேலையை எளிதாக்கி, மிக முக்கியமான தகவல்களை மட்டும் தர திட்டமிடுகிறது.
பிங், நான்கு பிரிவுகளைத் தன் இலக்காகக் கொண்டு தகவல்களைத் தருகிறது. அதன் ஒரே நோக்கம் – இணையத்தில் தேடுவதையும், தேடிப் பெறுவதையும் எளிதாக்குவதுதான். இது இதன் ஹோம் பேஜிலேயே தொடங்குகிறது. இங்கு வண்ணமயமான திரையின் நடுவே சர்ச் பாக்ஸ் தரப்பட்டுள்ளது. இடது பக்கம் தேடலுக்கான விடைகள் வீடியோ, நியூஸ், ஷாப்பிங், இமேஜஸ் மற்றும் ட்ராவல்ஸ் அல்லது மேப்ஸ் எனத் தரப்பட்டுள்ளது.
நீங்கள் உங்கள் தேடலைத் தொடங்குகையிலேயே, பிங் ஆட்டோ சஜஸ்ட் (Auto Suggest) என்னும் சாதனத்தை இயக்குகிறது. நீங்கள் தரும் ஒரு சில எழுத்துக்களின் அடிப்படையில் சொற்களைக் கொடுத்து, நீங்கள் தேடுவதில் இவை உள்ளனவா என்று ஒரு பட்டியலைக் காட்டுகிறது. Best Match என்று சொல்லி நீங்கள் தேடுவதற்கு இதுவே மிகச்சரியான தகவலாக இருக்கும் என்று காட்டுகிறது.
உங்கள் தேடல்களை வகைப்படுத்தி, உங்களுக்கு நினைவூட்டி நீங்கள் தேடும் வேலையை, திசையை எளிதாக்குகிறது. இது பிங் தரும் Explore Pane என்பதில் தொடங்குகிறது. ஹோம் மற்றும் முடிவுகள் பட்டியல் அருகே இது காணப்படுகிறது. இதன் மூலம் நாம் நமக்குத் தேவையில்லாத தளங்களை ஒதுக்கலாம். இந்த பிரிவிலேயே, நாம் அண்மையில் மேற்கொண்ட தேடல்களையும், நாம் ஆர்வம் கொள்ளக் கூடிய தளங்களின் பெயர்களையும் காட்டுகிறது.
பிங் தளத்தில் காட்டப்படும் வசதியின் மூலம், நாம் ஒரு தளத்தின் பெயரில் கிளிக் செய்யாமலேயே, அது எப்படி இருக்கும் என ஒரு பிரிவியூவினைக் காணலாம். நம் தேடுதலுக்கானப் போதுமான தகவல்கள் இருந்தால், அந்த தளத்தின் பெயர் மீது கர்சரைக் கொண்டு சென்றால், இந்த பிரிவியூ காட்டப்படுகிறது. இதனைப் பார்த்த பின்னர் இது நாம் தேடும் தளம் என்று முடிவெடுத்து, அதன் மேல் கிளிக் செய்திடலாம். இதனால் தான் பிங் தேடல் சாதனத்தை டெசிசன் இஞ்சின் என்று மைக்ரோசாப்ட் அழைக்கிறதோ!
இப்படியே பல வழிகளில் தேடல்களை எளிதாக்கித் தகவல்களை நாம் தேர்ந்தெடுத்துக் காண பிங் வழி வகுக்கிறது.கூகுளைப் பொறுத்தவரை அதன் உயிர்நாடி மற்றும் வர்த்தகத்தின் மைய மூலதனமே தேடல் இஞ்சின் தான். ஆனால் மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் உலகில் பல பிரிவுகளைக் கையாள்கிறது. இதன் சர்ச் இஞ்சின் லைவ் சர்ச் (Live Search) ஒரு முழுமையான, இதற்கென மட்டும் வடிவமைக்கப்பட்டதாக அமையவில்லை. கூகுள் இஞ்சினுடன் அதனால் போட்டியிட முடியவில்லை.
ஆகவே தான் மைக்ரோசாப்ட் பிங் இஞ்சினை வடிவமைத்தது. இந்த பிரிவில் தனிக்காட்டு ராஜாவாக இயங்கும் கூகுள் இஞ்சினிலிருந்து தனித்துக் காட்ட, தன் பிங் ஹோம் பேஜை வண்ணமயமாக மாற்றியது. இதில், தான் அமைத்துள்ள சில முக்கிய இடங்களை ஹாட் ஸ்பாட் என அழைத்தது. இந்த ஹாட் ஸ்பாட் மீது உங்கள் கர்சரைக் கொண்டு சென்றால், அங்குள்ள படம் குறித்து பல தகவல்கள் பாப் அப் ஆகி இதனையா தேடுகிறாய் என்று கேட்கும். இப்படிப் பல வித்தியாசமான வகைகள் மூலம் கூகுளிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளது பிங்.
ஒரு தகவலைத் தேடுகையில் இரண்டு இஞ்சின்களும் எப்படி இயங்குகின்றன என்று பார்க்க, நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம். bingvsgoogle.com என்றே ஓர் இணைய தளம் உள்ளது. ஆனால் கூகுளையும் சற்று திகைக்க வைத்த செய்தி, யாஹூ நிறுவனத்தின் சர்ச் இஞ்சினை மேம்படுத்த மைக்ரோசாப்ட் ஏற்படுத்திய பத்து ஆண்டு கால ஒப்பந்தம் தான். யாரும் எதிர்பார்க்காத ஒன்று இது. யாஹூ தற்போது சர்ச் இஞ்சின் மார்க்கட்டில் 20% கொண்டுள்ளது. இத்துடன் மைக்ரோசாப்ட் தேடல் இஞ்சின் செயல்பாட்டினைக் கொண்டால் கூகுள் கொண்டிருப்பதில் பாதியாவது இந்தப் பக்கம் இருக்கும்.
மைக்ரோசாப்ட், பிங் தேடல் இஞ்சின் உருவாக்க 8 கோடி டாலர் செலவழித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு சர்ச் இஞ்சின் மார்க்கட்டில் அதிகரிக்குமா என்பது அவரவர் கற்பனைக்கு விட வேண்டிய கேள்வியாகும். இருப்பினும் பிங் வந்த பின்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு 10% ஆக இருந்தது என்பது உண்மை. ஆனால் கூகுள் இடத்தைப் பிடிக்க மைக்ரோசாப்ட் இன்னும் கடுமையாக உழைத்து மக்களைச் சந்திக்க வேண்டும். அதற்கான புதிய வழிகளை உருவாக்க வேண்டும். செய்திடுமா என்பதுவே இப்போது விடை காண முடியாத கேள்வி.
எழுதியவர் : கார்த்திக்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.