மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் - விமர்சனம்

28 வருடங்களுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கும் கௌபாய் படம். ஆஹா என்று கொண்டாடவும் முடியாத, அடச்சே என்று ஒதுக்கவும் முடியாத மிடில் கிளாஸை சேர்ந்தவன் சிம்புதேவனின் இந்த கௌபாய்.

ஹீரோவோட ஊர் ஜெய்சங்கர்புரம். இந்த ஜெய்சங்கர் வேறு யாருமில்லை, நடிகர் ஜெய்சங்கரேதான். நிறைய கௌபாய் படங்களில் நடித்தவர் என்பதால் ஊருக்கு நடுவில் ஒரு சிலையும் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு வில்லன் இரும்புக்கோட்டையை ஆளும் கிழக்குக்கட்டை. ஹாலிவுட்டில் கௌபாய் படங்களில் தூள் கிளப்பிய கிளி‌ண்ட் ‘ஈஸ்ட்வுட்’டின் தமிழ்ப்படுத்துதல்தான் கிழக்குக்கட்டை. வில்லன் அல்லவா? வில்லாதி வில்லன் நமது அசோகனின் சிலையை கிழக்குக் கோட்டையில் நிறுவியிருக்கிறார்கள்.

ஹீரோவுக்கும், வில்லனுக்கும் இப்படி தமிழ் சினிமாவை வைத்தே ஒரு பேக்ராப்பை உருவாக்கியிருக்கும் சிம்புதேவனின் கற்பனைக்கு ஒரு கைகுலுக்கல். கதையும் பெ‌ரிதாக பழுதில்லை.

கிழக்குக்கட்டையின் அக்கிரமங்களை எதிர்க்கும் ஜெய்சங்கர்புரத்து சிங்கம்தான் (லாரன்ஸ்) ஹீரோ. ஒரு சண்டையில் தப்பாட்டம் ஆடி சிங்கத்தை சின்னாபின்னமாக்கிவிடுகிறான் கிழக்குக்கட்டை (நாசர்). தலைவன் இல்லாமல் தவிக்கும் ஜெய்சங்கர்புரத்தைச் சேர்ந்த நாலு பேர் தோற்றத்தில் சிங்கம் போலவே இருக்கும் ஷோலேபுரத்து சிங்காரத்தை கடத்தி வந்து சிங்கம் போலவே உலவ விடுகிறார்கள். இது கிழக்குக்கட்டையின் ஆட்களுக்கு கிலியை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் கிழக்குக்கட்டை தேடிக் கொண்டிருக்கும் புதையல் இருக்கும் மேப் ஜெய்சங்கர்புரத்துக்காரர்கள் கையில் கிடைக்கிறது. மேப்பை தருகிறோம், எங்களை நிம்மதியாக இருக்கவிடு என்கிறார்கள் ஜெய்சங்கர்புரத்து மக்கள். ஆனால் கிழக்குக்கட்டை புதையலையும் நீங்கதான் எடுத்துத்தர வேண்டும் என்கிறான். சிங்கம் அண்ட் கோ புதையலை எடுத்தார்களா? கிழக்குக்கட்டையின் கொட்டம் அடங்கியதா? கிளைமாக்ஸ்.

உலகில் கௌபாய்கள் எங்கு தோன்றினார்கள், எங்கெல்லாம் வாழ்கிறார்கள் என்று சின்சியராக படத்தை ஆரம்பிக்கும் போது அட ஒரு வித்தியாசமான படம் என்று நிமிர்ந்து உட்காருகிறோம். அடுத்த காட்சியிலேயே, அப்படியெல்லாம் இல்லை, இம்சை அரசன் மாதி‌ரிதான் இதுவும் என்று பொங்கிய பாலில் பன்னீர் தெ‌ளிக்கிறார்கள்.

லாரன்ஸ் ஸ்டைலாக துப்பாக்கி பிடிக்கிறார், அதைவிட ஸ்டைலாக நடனம் ஆடுகிறார். ஆனால் முக்கியமாக வரவேண்டிய காமெடி மட்டும்தான் கடைசி வரை வரவில்லை. சிங்கம் என்ற வீரனாகவும், சிங்காரம் என்ற கோழையாகவும் லாரன்சுக்கு இரண்டு வேடங்கள். ஜெய்சங்கர்புரத்து ஜெய்கணேஷின் மகளாக வருகிறார் பத்மப்‌ரியா. படத்தில் உள்ள மூன்று ஹீரோயின்களில் கவர்வது இவர் மட்டுமே. கவுனும், வட்ட தொப்பியும் இவருக்கு அம்சமாகப் பொருந்துகிறது. நடிப்பு? ஜெய்சங்கர்புரத்தில் அதற்கு வேலையே இல்லை.

இந்த‌க் கதைக்கு இடைச்செருகலாக வருகிறார்கள் செவ்விந்தியர்கள். அவர்கள் தலைவர் நமது எம்.எஸ்.பாஸ்கர். பு‌ரியாத பாஷையில் அவர் பேச, ஒருவன் அதை மொழிபெயர்க்க, கொஞ்ச நேரம் சி‌ரிப்பில் நம் வயிற்றை பதம்பார்க்கிறார்கள். எ‌ரிமலை குழம்பிற்கு மேலே எம்.எஸ்.பாஸ்கர் தொங்கிக் கொண்டிருக்கும் போதும் நமது மொழிபெயர்ப்பாளன் தனது வேலையை சின்சியராகச் செய்ய சி‌ரிப்பில் வெடிக்கிறது திரையரங்கு.

மொத்தப் படத்திலும் அனைவரையும் கவர்கிறவர் கிழக்குக்கட்டையாக வரும் நாசர். பாதி ஆங்கிலமும் மீதி தமிழுமாக, இன்னா மேன் என்று வசனத்தை அவர் இழுக்கும் போதே குஷியாகிவிடுகிறது மனசு. சொந்த மக்கள் நடுத்தெருவில் நின்றாலும், நடுக்கடலில் நின்றாலும் கவலைப்பட மாட்டானுங்க, சோப்பு விக்க வந்தவனுங்களுக்கே நூத்தைம்பது வருஷம் கழுவிவிட்டவனுகதானே என்று அரசியலையும் அவ்வப்போது டச் செய்திருக்கிறது சிம்புதேவனின் பேனா.

நாச‌ரின் வலதுகரமாக வருகிறார் சாய்குமார். உலக்கை என்ற இவரது கதாபாத்திரம் சிரஞ்சீவியின் படத்தில் வரும் டிங்கோ டிங்கு கதாபாத்திரத்தை நினைவுப்படுத்துகிறது. நாச‌ரின் நம்பிக்கைக்கு‌ரிய இன்னொரு கரம் பக்கியாக வரும் லட்சுமிராய். லாரன்சுடன் சேர்ந்து செமத்தியாக ஒரு ஆட்டம் போடுகிறார், அத்தோடு ச‌ரி. பாவம் சந்தியா. செவ்விந்திய தலைவ‌ரின் மகளாக வரும் அவருக்கு அதுகூட இல்லை. படத்தில் மனோரமாவும் இருக்கிறார். பாவி மகனே என்று அவர் வாய் திறந்த உடனேயே சின்னதம்பிதான் நினைவுக்கு வருகிறது. மாடுலேஷனையாவது மாத்துங்க ஆச்சி.

கௌபாய் படங்களின் ஆன்மாவே அதன் இசைதான். ‌ஜி.வி.பிரகாஷ் அதை உணர்ந்த மாதி‌ரி தெ‌ரியவில்லை. முத்துரா‌ஜின் ஆர்ட்டில் பிரமாண்டம் வழிகிறது. புதையல் தேடும் சொதப்பல் காட்சிகளை இவரது கைவண்ணம்தான் தூக்கி நிறுத்துகிறது. நிறைவான ஒளிப்பதிவு. என்றாலும், ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் தி வெஸ்ட், தி குட் தி பேட் அண்ட் தி அக்ளி படங்களின் ப்ரேம்களையும், லாங் ஷாட்களையும் நினைக்கும் போது, ம்ஹும்...

சிம்புதேவனின் களம் ச‌ரிதான், போட்ட விதைதான் பிரச்சனை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

Note: Only a member of this blog may post a comment.