மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பின்னணி பாடகி சுவர்ணலதா திடீர் மரணம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படப் பின்னணிப் பாடல்களைப் பாடிய பிரபல பாடகி சுவர்ணலதா நேற்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 37.

நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சுவர்ணலதா நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

1995ஆம் ஆண்டு பாரதிராஜாவின் கருத்தம்மா திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய "போறாளே பொன்னுத்தாயி" என்ற அருமையான பாடலுக்கு தேசிய விருது பெற்றார்.

இவர் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் பிறந்தவர். இவரது தந்தை கே.சி.செருக்குட்டி ஹார்மோனியம் வாசிப்பவர், பாடகர். தாய் கல்யாணியும் இசையில் நாட்டமுடையவர்.

சுவர்ணலதாவிற்கு ஹார்மோனியமும், கீ போர்டு இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரியும்.

1989ஆம் ஆண்டு முதல் பாடி வரும் சுவர்ணலதா, இளையராஜாவின் இசையில் சத்ரியன் என்ற படத்தில் "மாலையில் யாரோ மனதோடு பேச" என்ற பாடல் மூலம் தனது அருமையான குரல் வளத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து இவர் அலைபாயுதே படத்தில் பாடிய 'எவனோ ஒருவன்", பாம்பே திரைப்படத்தில் பாடிய குச்சி குச்சி ராக்கம்மா, ஜென்டில்மேன் படத்தில் பாடிய 'உசிலம் பட்டி பெண்குட்டி' காதலன் படத்தில் முகாபலா முகாபலா ஆகிய பாடல்கள் தமிழ் நாட்டில் அடிரடி ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரேயில் இவர் பாடிய 'பூங்காற்றிலே", இந்தியன் படத்தில் பாடிய மாயா மச்சீந்திரா' ஆகியவையும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவருக்கு புகழ் சேர்த்தன.

இளையராஜா இசையில் எடுத்துக் கொண்டால், கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவர் பாடிய 'ஆட்டமா, தேரோட்டமா', சின்ன ஜமீனில் பாடிய 'வனப்புத்தட்டு புல்லாக்கு', சத்ரியனில் "மாலையில் யாரோ", சின்னத்தம்பியில் 'போவோமா ஊர்கோலம்', சின்னத்தாயி படத்தில் பாடிய 'நான் ஏரிக்கரை" ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.

மேலும் ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை படத்தில் இவர் பாடிய 'மாசி மாசம்', ராஜ்கிரணின் ராசாவின் மனச்சுல படத்தில் பாடிய 'குயில் பாட்டு', புதுப்பட்டி பொன்னுத்தாயி படத்தில் பாடிய 'ஊரடங்கும் சாமத்தில' ஆகிய பாடல்கள் ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்டு போக,

பட்டித் தொட்டிகளிலெல்லாம் முழங்கியது தளபதி படத்தில் இவர் பாடிய 'அடி ராக்கம்மா கையத்தட்டு'. தேவர் மகனில் இடம்பெற்ற 'மணமகளே, மருமகளே' என்ற அருமையான பாடலுக்கு சொந்தமானவரும் சுவர்ணலதாவே என்பது குறிப்பிடத்தக்கது.

வீராவின் இரண்டு ஹிட் பாடல்களான 'மாடத்திலே கன்னி மாடத்திலே', 'மலைகோயில் வாசலில்' ஆகிய இரண்டையும் பாடியவர் சுவர்ணலதா.

இவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே தமிழில் ஹிட் பாடல்கள் என்றால் அது மிகையாகாது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.