மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தமிழுக்கு கதவை திறந்த - ஹாலிவுட்

ஹாலிவுட் தயா‌ரிப்பு நிறுவனமான டுவென்டியத் செஞ்சு‌ரி ஃபாக்சின் இந்திய நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தமிழில் படங்கள் தயா‌ரிக்க முன்வந்துள்ளது. இதற்காக அந்நிறுவனம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது பெய‌ரில் தொடங்கியிருக்கும் தயா‌ரிப்பு நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்த ஹாலிவுட், தமிழக கூட்டுத் தயா‌ரிப்பில் தயாராகும் முதல் படத்தை முருகதாஸின் முன்னாள் உதவியாளர் சரவணன் இயக்க விமல், ஜெய் இருவரும் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள். வருங்காலத்தில் இந்த கூட்டுத் தயா‌ரிப்பு மெகா பட்ஜெட் படங்களை‌த் தயா‌ரிக்கும் எனவும் முருகதாஸ் தெ‌ரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு தமிழ் சினிமாவில் தினந்தோறும் நடைபெறும் நிகழ்வைப் போல் தோன்றினாலும் இது மிகவும் ச‌ரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

திரைப்படம் ஒரு கலை வடிவம் என்றாலும் அது மற்ற கலைகளிலிருந்து மாறுபட்டது. தொழில்நுட்பத்தால் பிற கலைகள் மிகக்குறைந்த அளவே மாறுதல்கள் அடைந்துள்ளன. ஆனால் தொழில்நுட்பம் வளரும்தோறும் திரைப்படங்களின் தரமும், வடிவமும் மாறிக் கொண்டே வருகின்றன. திரைப்படத்தையும், தொழில்நுட்பத்தையும் பி‌ரிக்க முடியாது என்பதே இதற்கு காரணம். இன்னும் ச‌ரியாகச் சொல்வதென்றால் திரைப்படமும் ஒருவகையான தொழில் நுட்பமே.

பின்னணி இசை, கிராஃபிக்ஸ் போன்ற ஆடம்பரங்கள் இல்லாமல் உருவாக்கப்படும் ஈரானிய திரைப்படங்களுக்குகூட கேமரா, எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப அறிவு தேவைப்படுகிறது. ஒரு ஓவியம் வரையவோ, கதை எழுதவோ, சிற்பம் செதுக்கவோ இப்படியான அறிவு தேவையில்லை என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த தமிழக கலைஞர்களுக்கு பெரும் இடையூறாக இருப்பது பட்ஜெட். தமிழில் சோதனை முயற்சிப் படங்களுக்கு மூன்று கோடி செலவ‌ழித்தாலே அதனை திருப்பி எடுக்க முடியாத நிலை உள்ளது. இதுவே விஜய், அ‌‌ஜீத் போன்றவர்களின் படங்கள் என்றால் அதிகபட்சம் முப்பது கோடிகள் வரை செலவ‌ழிக்கலாம் (இதில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மட்டும் பதினைந்து கோடியை தாண்டிவிடும்). இது போன்ற சூழலில் ஹாலிவுட்டில் தயாராகும் கிளாடியேட்டர், டைட்டானிக்.. ஏன் டாய் ஸ்டோ‌ரி போன்ற அனிமேஷன் படங்களை தமிழில் எடுக்க மட்டுமல்ல, கனவுகூட காண முடியாது.

தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை தொட்டுவிட்டோம் என்று நாம் தோள் தட்டிக் கொண்டாலும் அவதார் போன்ற படத்தை 3டி-யில் பார்ப்பதற்கான ச‌ரியான திரையரங்குகள் இல்லாத நிலையில்தான் தமிழக திரையுலக கட்டுமானம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் நமது வியாபார எல்லை மிகக் குறுகியதாக இருப்பதே.

ஐந்து நட்சத்திர விடுதியொன்றை அண்ணா சாலைக்கருகில் அமைத்தால் அதிலிருந்து லாபம் பார்க்க முடியும். அதே விடுதியை ஆண்டிப்பட்டியில் கட்டினால்..? ஆண்டிப்பட்டியின் மக்கள் தொகைக்கும், வியாபாரத்துக்கும் டாடா உடுப்பி போன்ற நடுத்தர ஹோட்டல்களே அதிகபடி. ஐந்து நட்சத்திர விடுதிகட்டி லாபம் பார்ப்பது என்பதெல்லாம் கற்பனைக்கே எட்டாதது.

அதேபோல்தான் திரையுலகமும். சில கோடிகள் வருமானம் மட்டுமே ஈட்ட முடிகிற தமிழ் திரையுலகில் பல நூறு கோடியில் படமெடுப்பது சாத்தியமில்லை. ஹாலிவுட்டில் அது சாத்தியமாகிறது என்றால் ஆயிரம் கோடி செலவ‌ழித்தாலும் அதனை திருப்பி எடுக்கிற வியாபார பின்புலம் அவர்களுக்கு உலகம் முழுவதும் உள்ளது.

இந்த இடத்தில்தான் ஹாலிவுட் நிறுவனத்தின் தமிழக வருகை முக்கியத்துவம் பெறுகிறது. ஹாலிவுட் நிறுவனத்தின் வியாபார எல்லையும், விளம்பர எல்லையும் மிகப் பெ‌ரியது. தமிழில் உருவாகும் ஒரு திரைப்படத்தை அவர்களால் உலகம் முழுவதற்கும் எடுத்துச் செல்ல முடியும். இதன் மூலம் தமிழ் திரைப்படங்களின் வியாபார எல்லை மேலும் வி‌ரிவடைவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கமலின் மருதநாயகம், மர்மயோகி போன்ற திரைப்படங்கள் முன்னகராமல் நின்று போனதற்கும், எந்திரன் படம் இத்தனை வருடங்கள் காலதாமதமானதற்கும் பட்ஜெட்டும், குறுகிய வியாபார எல்லையுமே காரணமாகும். வருங்காலத்தில் மெகா பட்ஜெட் படங்களை‌த் தயா‌ரிக்கும் திட்டம் உள்ளதாக முருகதாஸ் அறிவித்திருப்பது மருதநாயகம், மர்மயோகி போன்ற படங்கள் தடைபடாமல் இருப்பதற்கான நம்பிக்கையை அதிக‌ரித்துள்ளது.

இந்த இடத்தில் வேறு ஒன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். வியாபாரத்தையும், பட்ஜெட்டையும் வலியுறுத்துவதால் ஒரு படத்தின் தரத்தையும், கலை நேர்த்தியையும் பட்ஜெட்டும் தொழில்நுட்பமும்தான் உறுதி செய்கிறது என்று நாம் நம்புவதாக எடுத்துக் கொள்ளலாகாது. குறைவான பட்ஜெட்டில் தரமான படங்களை எடுக்க முடியும். ஒரு படத்தின் பட்ஜெட் அதன் தரத்தை நிர்ணயிக்காது.

அதேநேரம் ஒரு ச‌ரித்திர கதையையோ, சயின்ஸ் பி‌க்சனையோ படமாக்க முற்படும் போது பட்ஜெட் மிகப்பெ‌ரிய ரோலை எடுத்துக் கொள்கிறது. உயர் தொழில்நுட்பமும், சிறந்த கிராஃபிக்ஸும், பிரமாண்ட அரங்குகளும் இவற்றுக்கு தேவை. கோடிகளை கொட்டாமல் இவ்வகை படங்களை தயா‌ரிப்பது அவதாரை அமைஞ்சிக்கரை மார்க்கெட்டில் எடுப்பதைப் போல கேலிக்கூத்தாகிவிடும்.

இந்த வகையான பெருமுதல் முயற்சிகளுக்கு ஹாலிவுட் நிறுவனத்தின் வருகை நம்பிக்கையின் கதவை திறந்து வைத்துள்ளது. இந்த‌க் கதவை அகல திறப்பதும் முன்னேறிச் செல்வதும் அவரவர் ஆர்வத்தையும், திறமையையும் பொறுத்தது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.