மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மிஷ்கின் உண்மை பேசுவாரா ??

மிஷ்கினின் நந்தலாலா திரைப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன் தனது வழக்கத்தை மீறி அது பற்றி பல‌ரிடமும் பாராட்டிப் பேசியதை நாம் அறிவோம். நந்தலாலா போன்ற திரைப்படங்களுக்கு உங்களைப் போன்றவர்கள் ஆதரவு தர வேண்டும் என்று சன்பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகா‌ரியிடம் நேரடியான கூறவும் செய்தார்.

நந்தலாலா திரைப்படத்தை இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக தமிழின்; முக்கியமான எழுத்தாளர்களான சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், பவா செல்லத்துரை போன்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வளவும் ஏன், ப்‌ரிவியூ பார்த்த பத்தி‌ரிகையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி படத்தை வரவேற்றுள்ளனர்.

ஆனால்...

இத்தனைக்குப் பிறகும் மிஷ்கின் உண்மை பேசுவதாக இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

நந்தலாலா படம் ஐப்பானிய இயக்குனர் டகேஷி கிட்டானோ 1999ல் இயக்கிய கிகு‌ஜிரோ படத்தின் அப்பட்டமான தழுவல். கிகு‌ஜிரோவின் ஆன்மாவை சிதைக்காமல் தமிழ் சினிமாவுக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும் ஏற்ப அற்புதமாக படமாக்கியிருக்கிறார் மிஷ்கின். மற்றொருவ‌ரின் படத்தை அதன் ஆன்மா கெடாமல் எடுப்பது மிகப்பெ‌ரிய கலை. உலகின் புகழ்பெற்ற இயக்குனர்கள் பலரும் இதனை செய்திருக்கிறார்கள்.

ஷேக்‌ஸ்பிய‌ரின் நாடகத்தை அகிரோ குரோசவா, கொடார்ட் போன்ற மேதைகள் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். அப்படி படமாக்கப்பட்ட ரான், த்ரோன் ஆஃப் பிளட் போன்றவை இன்றும் உலக ரசிகர்களால் காவியமாகக் கொண்டாடப்படுகிறது. குரோசவா ப்‌ரியரான மிஷ்கினுக்கு தெ‌ரியாததல்ல.

இந்தியாவிலும்கூட கப்போலோவின் காட்ஃபாதர் திரைப்படத்தைதான் ராம்கோபால் வர்மா சர்க்கார் என்ற பெய‌ரில் திரைப்படமாக்கினார். ஷேக்ஸ்பிய‌ரின் மெக்பத் நாடகம்தான் விஷால் பரத்வா‌ஜ் இயக்கிய மெக்பூல். அவரது ஓம்காராவும் ஷேக்ஸ்பிய‌ரின் நாடகத்தின் தழுவலே. இன்று இந்தியா கொண்டாடும் அனுராக் காஷ்யபின்; தேவ் டி படம் கூட பழைய தேவதாஸின் மாடர்ன் வடிவமே.

இந்தப் படைப்பாளிகளின் படைப்புக்கும் நந்தலாலாவுக்கும் உள்ள ஒரேயொரு வித்தியாசம், அந்தப் படைப்பாளிகள் அவை எந்த நாடகத்தின் பாதிப்பில் எந்த திரைப்படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவித்தார்கள். அப்படி அறிவித்த பிறகே படப்படிப்புக்கு கிளம்பினார்கள்.

ஆனால் நந்தலாலாவின் படைப்பாளி அதனை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பதுடன் அதனை மறைப்பதற்கான அத்தனை இருட்டுப் பொந்துகளையும் படம் வெளியாகும் நிலையிலும்கூட துழாவி வருகிறார். மிஷ்கினிடமே நேரடியாக இதுகுறித்து கேட்ட போதும், உண்மையை ஒத்துக் கொள்ள அவர் மனம் ஒப்பவில்லை. ஒரு சிறந்த கலைஞனிடம் இருக்க வேண்டிய வெளிப்படையான நேர்மை மிஷ்கினிடம் இல்லாது போனது நமது துரதிர்ஷ்டமே.

சாரு நிவேதிதா தனது நண்பரான மிஷ்கினைப் பற்றி செய்தி ஒன்றை எழுதியிருந்தார். மிஷ்கினை ஒரு உதவி இயக்குனர் சந்தித்த போது சாருவும் உடனிருந்திருக்கிறார். உதவி இயக்குனர் மிஷ்கினிடம், ஒரு நல்ல படத்தை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு மிஷ்கின், நல்லவனாக இருக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

மிஷ்கின் அவர்களே... நேர்மை இல்லாத ஒரு மனிதன் எப்படி நல்ல மனிதனாக இருக்க முடியும்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.