மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> புத்துயிர் பெறுமா தமிழ்‌த் திரையுலகம்?

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அரசியல்வாதி என்பதைவிட சினிமாக்காரன் என்று சொல்லிக் கொள்வதையே விரும்புகிறேன் என்று அறிவித்த கலைத்தாகம் கொண்ட கருணாநிதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார். நியாயமாக கருணாநிதியின் பின்னடைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். மாறாக 90 சதவீத திரையுலகினர் இதனை பெரும் உவகையுடன் கொண்டாடி வருகின்றனர். கருணாநிதியின் கலைத்தாகம் அவரது குடும்பத்துக்கு - குறிப்பாக பேரன்களின் சுயநல அறுவடைக்கே பெரும்பாலும் பயன்பட்டது.

பேரன்களை பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் கருணாநிதி உதாரணங்கள் காட்டினார். மெய்யப்ப செட்டியா‌ரின் பிள்ளைகள் சினிமா தயா‌ரிக்கவில்லையா? சிவகுமா‌ரின் பிள்ளைகள் நடிக்கவில்லையா? ர‌ஜினியின் மகள் தயா‌ரிப்பாளராகவில்லையா... ? என் பேரன்கள் சினிமாவுக்கு வந்தால் மட்டும் சிலருக்கு ஏன் இந்த நெஞ்செ‌ரிச்சல்?

எதி‌ரியை புன்னகையுடன் எதிர்கொள்வதாக தம்பட்டம் அடித்தவரால் இந்த வாரிசு பிரச்சனையில் புன்னகைக்க முடியவில்லை. மனக்கசப்பும், வெறுப்புணர்வும் அவரது பதில்களில் வழிந்தோடியது. அவருக்கே தெ‌ரியும், நாம் சொல்லும் உதாரணங்கள் எத்தனை அபத்தமானவை என்று. அதுதான் இந்த கோபம், நெஞ்செ‌ரிச்சல்.

வா‌ரிசுகள் சினிமாவுக்கு வருவது தவறல்ல. அது தடுக்கக் கூடியதும் அல்ல. கருணாநிதியின் பேரன்கள் சினிமாத்துறைக்கு வந்ததல்ல பிரச்சனை. அதிகார பின்புலத்தில் தங்களைத் தவிர வேறு யாரும் தொழில் செய்ய முடியாதபடி அவர்கள் திரைத்துறையை முடக்கினார்கள். கருணாநிதி குறிப்பிடும் வேறு எந்த வா‌ரிசுகளும் இந்த சர்வாதிகார பாதையில் சஞ்ச‌ரித்ததில்லை. ஆட்சி அதிகாரம் என்ற பிரம்பு கருணாநிதியின் பேரன்களுக்கு மட்டுமே வாய்த்திருந்தது.

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் ஏறக்குறைய 240 திரையரங்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் கைவசம் ஏறக்குறைய 170 திரையரங்குகள். தயாநிதி அழகி‌ரியின் கிளவுட் நைன் கைவசம் சுமார் 140 திரையரங்குகள். இந்த மூன்று நிதிகளில் ஏதேனும் ஒருவ‌ரின் ஆசி இன்றி ஒருவர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட முடியாது. மீறி வெளியிட்டவர்களுக்கு எல்லாவகையிலும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.

கருணாநிதியின் பேரன்கள் ஒரு படத்தை விரும்பினால் அவர்கள் விரும்பும் விலைக்கு அந்தப் படம் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். மீறி திரையரங்குகளில் நேரடியாக திரையிட்ட போதெல்லாம் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டார்கள். லாபம் ஈட்ட முடியும் என்று நம்பக்கூடிய படங்கள் அனைத்தும் நிதிகளால் வாங்கப்படும் சூழலில் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் இந்த மிரட்டலுக்கு அடிபணிவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

தங்களுக்கு உடன்படாதவர்களை மிரட்டுதல், அவர்களின் படங்களை இருட்டடிப்பு செய்தல், நடிகர்களுக்கு கால்ஷீட் நெருக்கடியை உருவாக்குதல், சங்கத்தின் விதிகளை தேவைக்கேற்ப வளைத்தல் என்று முன்னாள் முதல்வ‌ரின் பேரன்கள் நடத்திய சர்வாதிகார சூதாட்டம், ஆட்சி மாற்றத்தால் காலாவதியாகியிருக்கிறது. நிதிகளின் ஆதிக்கம் தமிழ்‌த் திரைத்துறையில் முழுமையாக ஒழிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

சினிமாவுக்கு சவாலாக இருக்கும் திருட்டு டிவிடி பிரச்சனையும் கட்டுக்குள் வரும் என்பது பல‌ரின் நம்பிக்கை. பேரன்களின் படங்களின் டிவிடிகள் மட்டும் விற்கக்கூடாது, மற்றவற்றுக்கு தடையில்லை என்பதான ஆபாச உடன்படிக்கைக்கு இனி வழியிருக்காது. இப்படி சொல்வதன் பொருள் புதிய ஆட்சியில் திரைத்துறையில் சர்வாதிகாரமோ, சுயநலச் சுரண்டல்களோ இருக்காது என்பதல்ல. ஆட்சி மாற்றத்தின் மூலம் அதிகாரமும், ஆட்களும் மாறியிருக்கிறார்கள் அவ்வளவே.
ஆட்சி மாறிய அடுத்த நாளே தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தில் வேடிக்கைகள் அரங்கேறின. ராம.நாராயணன் பதவி விலகினார். அவருக்குப் பதில் ஜெயலலிதாவின் திடீர் விசுவாசி எஸ்.ஏ.சந்திரசேகரன் தயா‌ரிப்பாளர்கள் சங்கத் தலைவராக முடிசூட்டப்பட்டிருக்கிறார். இதன் மூலம் அதிமுக-வுக்கு ஆதரவு தெ‌ரிவித்து பிரச்சாரம் செய்ததற்கான உடனடிப் பலன் அவருக்கு அருளப்பட்டிருக்கிறது.

இதுவரை சங்கத்தால் ஒதுக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பழைய விசுவாசிகள் புதிய பலத்துடன் திரும்பியிருக்கிறார்கள். வசைபாடுதல், குற்றம் சுமத்துதல், எச்ச‌ரிக்கை விடுத்தல் என முன்பு ஆட்சி மாறிய போது நடந்த அதே காட்சிகள் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. நடிகர்கள் வேறு, காட்சிகள் அதேதான்.

முந்தைய ஆட்சி அளவுக்கு இல்லையென்றாலும் தங்களுக்கு உடன்படாதவர்களை மிரட்டும், நெருக்கடி கொடுக்கும் சர்வாதிகாரப் போக்கு இனியும் தொடரும் என்பதையே கடந்த சில தினங்களாக தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்துவரும் கூத்துகள் தெ‌ரிவிக்கின்றன. ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி காலத்தில் அவருடன் நட்புடன் இருந்த சரத்குமார் அவரைவிட்டு விலகி திமுக-வில் இணைவதற்கு காரணம், சரத்குமா‌ரின் நாட்டாமை திரைப்படம் அனுமதியின்றி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதுதான் என்பதையும் இந்த நேரத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டும்.

மேலும், உள்ளூர் படப்பிடிப்பு கட்டணங்களை உயர்த்தி வெளி மாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் திரைத்துறையினரை துரத்தியதும் இப்போதைய ஆளும் கட்சிதான் என்பதையும் மறக்கலாகாது.

முக்கியமான இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த ஆட்சி மாற்றங்களும், நெருக்கடிகளும், நம்பிக்கைகளும், சலுகைகளும் சினிமா என்ற கலை ஊடகத்தின் வியாபாரம் என்ற ஒரு பக்கத்தை பாதிக்கக் கூடியது. சினிமாவின் தரத்தை இவை நிர்ணயிப்பதில்லை, உயர்த்துவதுமில்லை.

தமிழ் சினிமாவின் தரம் சினிமா என்ற கலைப்படைப்பின் மீது தீராக் காதல் கொண்ட தனி மனிதர்களின் கையில்தான் உள்ளது. குறிப்பாகச் சொல்வதென்றால் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தத் துடிக்கும் இயக்குனர்களின் கைகளில். பிதாமகன் பாலா, பருத்திவீரன் அமீர், சுப்பிரமணியபுரம் சசிகுமார், அழகர்சாமியின் குதிரை சுசீந்திரன், ஆடுகளம் வெற்றிமாறன், அஞ்சாதே மிஷிகின் போன்றவர்கள்தான் சினிமாவின் தரத்தை நிர்ணயிப்பவர்கள். அரசியல்வாதிகள், ஆட்சி மாற்றங்கள், பதவியைவிட்டு ஓடிப் பதுங்கியவர்கள், திடீர் விசுவாசிகள் இவர்களுக்கும் சினிமாவின் தரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர்கள் வியாபா‌ரிகள் அல்லது அவர்களின் பங்காளிகள்.

நல்ல சினிமா கலைஞர்களை நம்பியிருக்கிறதே அன்றி வியாபா‌ரிகளை அல்ல. என்றாலும், சினிமா ஒரு வியாபாரமும்கூட என்பதால் திரைத்துறையில் நடக்கும் சர்வாதிகாரப் போக்கும் சுரண்டல்களும் நல்ல சினிமாவின் வே‌ரிலும் நஞ்சை பாய்ச்சக் கூடியது.

விஞ்ஞான ஊழல்வாதிகள் அளவுக்கு இந்த ஆட்சியில் திரைத்துறைக்கு அப்படியான நெருக்கடிகள் இருக்காது என்றாலும், அரசியல் ஆதிக்கத்திலிருந்து திரைத்துறை முற்றாக தன்னை விடுவித்துக் கொள்வது ஒன்றே இதற்கான நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.