மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சினிமாக்காரர்கள் சித்து விளையாட்டில்.

தெய்வத்திருமகள் வெளியான அதே நாள் அப்படத்தில் நடித்த அமலாபால் சிந்து என்ற சினிமாப்பட போஸ்ட‌ரில் சி‌ரித்துக்கொண்டிருந்தார். ஏறக்குறைய காலைக்காட்சிப் படங்களின் தரத்தில் அந்த போஸ்டர் டிஸைன் செய்யப்பட்டிருந்தது. அமலா பால் எப்போது சிந்து என்ற படத்தில் நடித்தார்? திரையுலகைச் சார்ந்தவர்கள் மனதில் எழுந்த கேள்வி இது. சாதாரண ரசிகனின் மனதில் எழுந்த சந்தேகம் வேறு. அமலாபால் எப்போது ஏ படத்தில் நடித்தார்? ஒருவேளை ரதிநிர்வேதம் ஸ்வேதா மேனன் போன்று மலையாளத்தில் ஏதேனும் படத்தில் நடித்திருப்பாரோ?

சென்னையில் ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகளில் சிந்துவை திரையிட்டிருந்தனர். ஏதோ புதிய படம் என்று இளைஞர்கள் கூட்டம் திரையரங்கை மொய்த்ததை காண முடிந்தது. அமலாபாலின் ரசிகர்களும் அந்தக் கூட்டத்தில் இருக்கலாம். இளமை ததும்பும் காட்சிகளுக்காக திரண்டவர்களும் இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே கிடைத்திருக்கும். சிந்து என்ற பெய‌ரில் அவர்கள் திரையிட்டப் படம் சாமி இயக்கத்தில் அமலாபால் நடித்த சிந்து சமவெளி.

சாமிக்கு கனத்த எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்த இந்தப் படத்தில் மாமனாருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் காட்சியில் அமலாபால் நடித்திருந்தார். அப்போது அவரது பெயர் அனகா. படம் எதிர்பார்த்ததைவிட எக்கச்சக்க கெட்டப் பெயரை சம்பாதித்துக் கொடுத்ததால் அனகா என்ற அவரது பெயரையே மாற்ற வேண்டி வந்தது. அனகா அமலாபாலானார்.

குடும்பத்தார் மற்றும் நண்பர்கள், உறவினர்களின் கேள்விகள் அமலாபாலை ரொம்பவே நோகடித்தது. இப்படியொரு கேரக்ட‌ரில் ஏன் நடித்தாய் என்று சுற்றியிருப்பவர்கள் கேட்பதாக பேட்டியில் கதறினார். சில இடங்களில் கண்ணீரும் சிந்தியதாக கேள்வி. நல்லவேளையாக மைனா அவரை காப்பாற்றியது. அதன் பிறகு அமலாபாலின் கெத்தும் முறுக்கும் அனைவருக்கும் தெ‌ரிந்ததே. விக்ரம், ஆர்யா என்று அமலாபாலின் டய‌ரியில் முன்னணி நட்சத்திரங்கள் தொடர்ந்து இடம் பிடிக்கிறார்கள்.

அமலாபாலின் அனகா எபிசோடை ஜனங்கள் மறந்திருந்த நேரத்தில்தான் சிந்து சமவெளி சிந்து என்ற பெய‌ரில் வெளியாகியிருக்கிறது. அமலாபாலுக்கு இது பேரதிர்ச்சி. என்னுடைய பெயரை கெடுக்கிறார்கள் என்று மூக்கு சிந்துகிறார். அமலாபாலுடன் சேர்ந்து கர்சீப்பை நனைப்பதல்ல நமது நோக்கம். ஏற்கனவே வெளியான படத்தை வேறு பெய‌‌ரில் வெளியிட்டு எப்படி ரசிகர்களை ஏமாற்றலாம் என்பதே. சிந்து சமவெளி படத்தை சிந்து என்ற பெய‌ரில் வெளியிடுவது சட்டப்படி குற்றம். அது தெ‌ரிந்தே சிந்து என்ற பெ‌ரிய எழுத்தின் அருகில் கண்ணுக்கு தெ‌ரியாத அளவில் சமவெளி என எழுதியிருக்கிறார்கள். அதுவும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். நக்கீரனின் நெற்றிக்கண் இருந்தாலும் சமவெளியை கண்டுபிடிக்க முடியாது. அப்படியொரு தமிழ், ஆங்கில காம்பினேஷன்.

இதுபோன்ற மோசடிகள் திரையுலகில் நடப்பது முதல் முறையல்ல. பத்து வருடத்துக்கு முந்தைய ஜாக்கிசானின் படமாக இருக்கும். ஆனால் போஸ்ட‌ரில் முறைத்துக் கொண்டிருப்பவர் முந்தாநாள் ஜாக்கிசானாக இருப்பார். அதிரடி வீரன் என்றோ அசகாய சூரன் என்றோ தமிழில் பெயர் இருப்பதால் ஜாக்கிசானால்கூட அது தனது பழைய படம் என்பதை கண்டு பிடிக்க முடியாது. பத்துமுறை பார்த்த படத்தையே புதிய படம் என்று நினைத்து ஏமாந்து போவான் ரசிகன்.

இந்தவகை மோசடிகள் வேறு எந்த நாட்டிலும் இருப்பதாக‌த் தெ‌ரியவில்லை. கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ளனவா என்பது தெ‌ரியவில்லை. தமிழில் இதுபோன்ற மோசடிகள் அதிகம். இதுகுறித்து யாரும் இதுவரை புகார் தெ‌ரிவித்ததாகவும் செய்தியில்லை.

பொழுதுபோக்குக்கான விஷயங்கள் அதிக‌ரித்து வருருகின்றன. அதனால் திரையரங்குகளுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருக்கிறது. இதுபோன்ற சூழலில் திரையரங்குக்கு வருகிற குறைவான ரசிகர்களும் ஏமாற்றப்பட்டால் அது திரையுலகைதான் முதலில் பாதிக்கும். அவர்கள் மீதான கொஞ்ச நஞ்ச ம‌ரியாதையையும் காலி செய்துவிடும். சிந்துவுக்கு எதிரான முதல் குரல் திரையுலகிலிருந்து ஒலிப்பதுதான் முறையாகவும், ச‌ரியானதாகவும் இருக்கும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.