ஒன்றேமுக்கால் கோடி ரூபாய் மோசடி புகாரின் பேரில் 'சன்பிக்சர்ஸ்'' பட நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சக்சேனாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த சினிமா பட வினியோகஸ்தரான டி.எஸ்.செல்வராஜ், "கந்தன் பிலிம்ஸ்'' என்ற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதியிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், நான் சினிமா வினியோகஸ்தர் தொழில் செய்கிறேன். "சன்பிக்சர்ஸ்'' பட நிறுவனத்தினர் தயாரித்து வெளியிட்டுள்ள "தீராத விளையாட்டுப்பிள்ளை'' படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமையை வாங்கும்படி, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்னை வற்புறுத்தினார்.
அதன்பேரில், ஒன்றே முக்கால் கோடி கடன் வாங்கி கொடுத்து அந்த படத்தின் வினியோக உரிமையை வாங்கினேன். ஆனால் அந்த படத்தை சக்சேனாவே சேலம் பகுதியில் வெளியிட்டுவிட்டார். நான் கொடுத்த ஒன்றே முக்கால் கோடி பணத்தையும் திருப்பி தரவில்லை.
அந்த படத்திற்கு வசூலான 83 லட்சத்து 53 ஆயிரத்து 374 ரூபாயை தரும்படி கேட்டேன். ஆனால் சக்சேனா தராமல் இழுத்தடித்தார். கடந்த ஜனவரி மாதம் அதுபற்றி கேட்டபோது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகார் மனு மீது சென்னை கே.கே.நகர் காவல்துறையினர், கொலை மிரட்டல், மோசடி உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் சக்சேனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்றிரவு 7 மணி அளவில் ஹைதராபாத்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்த சக்சேனாவை விமான நிலையத்தில் வைத்து கே.கே.நகர் காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவரை அசோக்நகர் உதவி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார் என்று காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.