மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


வேதனையும் சோதனையும் 2011ல் தமிழ் சினிமா.

சென்ற வாரம் வெளியான மிட்டாய் என்ற திரைப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் - அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு சென்னையில் வசூலித்த தொகை 21,684 ரூபாய். வார இறுதி நாட்களின் வசூல் இப்படியென்றால் வேலை நாட்களில் வசூல் எவ்வளவு இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இதைவிட‌க் குறைவான தொகை வசூலித்தப் படங்களும் இருக்கின்றன. ராமநாதபுரம் என்ற படம் இதைவிட மோசமான வசூலை பெற்றுள்ளது.

21,000 ரூபாய் என்பது ஒருநாள் படப்பிடிப்பில் யூனிட்டின் உணவுத் தேவைக்குகூட ஆகாத பணம். அவ்வளவு குறைவு. இந்த நிலைமையில்தான் இன்று பெருவா‌ரியான திரைப்படங்கள் வசூல் செய்கின்றன.

இந்த வருடம் ஜூன் இறுதி வரை 61 திரைப்படங்கள் வெளியாயின. ஆகஸ்ட் இறுதியில் இந்த எண்ணிக்கை எண்பதை தொட்டிருக்கிறது. இதில் எத்தனை படங்கள் லாபம் சம்பாதித்துள்ளன என்று கணக்கிட்டாலே திரையுலகின் இன்றைய நிலைமை தெ‌ரிந்துவிடும். தயா‌ரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உ‌ரிமையாளர் என்று மூன்று தரப்பினரும் லாபம் அடைந்தால் மட்டுமே அப்படத்தை லாபம் ஈட்டிய படமாக ஒப்புக்கொள்ள இயலும். இதில் ஒரு தரப்பு நஷ்டப்பட்டாலும் அது வசூல்‌ ரீதியாக தோல்வியடைந்த படமே.

இந்த அடிப்படையில் இதுவரை மூன்று திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. அவை ஸ்டுடியோ கி‌‌ரீன் தயா‌ரித்த சிறுத்தை, ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்டின் கோ, லாரன்சின் காஞ்சனா. மற்ற படங்கள் மேலே உள்ள மூன்று தரப்பில் ஒருவருக்கோ இல்லை இருவருக்கோ இல்லை மூவருக்குமே நஷ்டத்தை ஏற்படுத்தியவை. இதில் கவலை தரும் அம்சம், 90 சதவீத படங்கள் மூன்று தரப்பினருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நஷ்டம் ஏன்? நடிகர்களின் அதிகபடியான சம்பளம், அதிக‌ரித்து வரும் தயா‌ரிப்பு செலவு, ரசிகர்கள் வேறு பொழுதுப்போக்குக்கு திசை மாறியது, திருட்டு டிவிடி என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன. திரையுலகினர் இதில் ஒரு அம்சத்தை வசதியாக மறைத்துவிடுகின்றனர். அது படங்களின் தரம்.

ஜனங்களுக்கு பிடித்தமான முறையில் படங்கள் இருந்தால் அவை மோசமான தோல்விகளை சந்திக்காது என்பதே வரலாறு. இதற்கு களவாணி சிறந்த உதாரணம். சாதாரண காதல் கதைதான். ஆனால் அதை எடுத்திருந்தவிதம் ரசிகர்களை‌க் கவர்ந்தது. கூட்டமாக திரையரங்குக்கு வந்து ரசித்தார்கள், படம் வெற்றி பெற்றது. ஆனால் இன்று வெளியாகும் படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பவையாகவே உள்ளன.

இரண்டு கோடிகள் இருந்தால் இன்று யாரும் படமெடுக்கலாம். புற்றீசல் போல் தயா‌ரிப்பாளர்கள் பல திசைகளிலிருந்தும் கிளம்பி வருகிறார்கள். இதில் கவலைதரும் அம்சம் பணம் போடுகிறோம் என்ற கோதாவில் இவர்களே கதாநாயகர்களாகவும், இயக்குனர்களாகவும் மாறி விடுகிறார்கள். லத்திகா டாக்ட‌ரிலிருந்து ராமர் ஹீரோ வரை எல்லோருமே பணம் இருப்பதால் ஹீரோவானவர்கள். தமிழ் சினிமாவின் வெற்றி சதவீதத்தை இவர்கள் படுபாதாளத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

நல்ல சினிமா என்று அடையாளப்படுத்தப்பட்ட தெய்வத்திருமகள் படமும் பல இடங்களில் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதுபோன்ற சோதனை முயற்சிப் படங்களின் பட்ஜெட் கட்டுக்குள் இருப்பது அவசியம். ஹீரோ மற்ற கமர்ஷியல் படங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் பாதியையே எதிர்பார்க்க வேண்டும். அப்படியிருந்திருந்தால் இந்தப் படமும் வெற்றிப் படமாகியிருக்கும்.

இந்த நஷ்டங்களைவிட கவலைதரும் விஷயம், ஆரண்யகாண்டம் படத்தின் தோல்வி. இந்த வருடம் தமிழில் வெளியான ஆகச் சிறந்த படமிது. உள்ளடக்கத்திலும், கதை சொன்ன விதத்திலும், நடிகர்களின் உடல் மொழியிலும் இப்படம் ஒரு மைல் கல். தமிழ் சினிமாவுக்கு புது திறப்பை தந்த படம். ஆனால் இப்படத்தை ரசிகர்கள் ஆத‌ரிக்காதது பெரும் ஏமாற்றமே.

ஆகஸ்ட் இறுதியில் மங்காத்தா வெளிவருகிறது. அடுத்து வேலாயுதம், நண்பன், 7 ஆம் அறிவு... இந்த வருடத்தின் இனி வரும் மாதங்களாவது தமிழ் சினிமாவுக்கு வசந்த காலமாக அமைய வேண்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.