உலகக் கோப்பை போட்டியானாலும் உள்ளூர் போங்கு ஆட்டமானாலும் கிரிக்கெட்டுக்கு மவுசு இருக்கதான் செய்கிறது. அந்த நம்பிக்கையில் யுவராஜ் எறிந்திருக்கும் பால்தான் இந்த போட்டாபோட்டி.
உப்பார்பட்டி என்ற உருப்படாத ஊரில் கொடைவாணன் தலைமையில் ஒரு கோஷ்டி, கொலைவாணன் தலைமையில் எதிர் கோஷ்டி. இருவருக்கும் பொதுப் பிரச்சனையாக மாமன் மகள் பாரிஜாதம். அழகான மாமன் மகளுடன் மாமனின் கட்டுக்கடங்கா சொத்தும் கைவரும் என்பதால் பகை முற்றி, கிரிக்கெட் போட்டியில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கு பெண்ணும், சொத்தும் என்றாகிறது. வழியே போன கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷை கோச்சாக கொடைவாணன் குரூப் இழுத்துப் போட அக்கப்போரும், அசட்டுத்தனமுமாக இரண்டு மணி நேரம் ஓடியேப் போகிறது.
சடகோபன் ரமேஷுக்கு அசடுகளுக்கு நடுவில் அசடாகவே பழக வேண்டிய நிலை. சலிப்பும் வெறுப்புமாக தொடங்கி பொறுப்பான கோச்சாக டீமை ஜெயிக்க வைக்கிறார். ஹீரோயின் ஹரிணியுடனான காட்சியிலும் கடுகு தாளித்த எஃபெக்டில் முகத்தை வைப்பதுதான் கடுப்படிக்கிறது. ரமேஷைவிட கொடைவாணன் ஆர்.சிவம்தான் சிக்ஸர் மழை பொழிகிறார்... டயலாக்கில்தான். மாமன் மகளை கடத்தி வந்து காரியம் முடிக்கலாம் என்று அல்லக்கை சொல்ல, என்னடா அவளை கொன்னுரலாம்ங்கிறியா என்று அப்பாவியாக கேட்கிறாரே... அதிருது திரையரங்கு. இதேபோல் அவர் அடிக்கும் அசட்டு டயலாக்கும், அப்பாவி உடல் மொழியும் போட்டாபோட்டியின் முதுகெலும்பு.
என் பாவடையை தூக்கினவன்தானே என்று ஹரிணி அடிக்கடி சொல்வது ஆபாசம் இல்லாத கிளுகிளுப்பு. அதிலும் அந்தக் குட்டிப் பயல் வாய் நிறைய சிரிப்புடன், சிவப்பு ஜட்டிதானே போட்டிருந்த என்று கேட்பது உலகமகா நக்கல். சடகோபன் ரமேஷை காதல் பார்வை பார்ப்பது தவிர்த்து இவருக்கு அதிக வேலையில்லை.
கொடைவாணன் குரூப்பின் அவதாரமாக வருகிறவர் யார் சார். பழுக்க காய்ச்சியை கம்பியை, காய்ச்சியவன் பட்டக்சுக்கு கீழேயே வைத்துவிட்டு ஓடுகிறாரே... இவர் வாய்திறக்கும் போதெல்லாம் குசும்பு குற்றாலமாக கொட்டுகிறது. ஃபுட்பால் மேட்சை டிவியில் போட்டு கிரிக்கெட் பாடம் நடத்தும் மயில்சாமியின் காமெடியில் ரேஷன் சிக்கனம்.
பாடல்களும், பின்னணி இசையும் உறுத்தாமல் இருந்தாலே இந்த மாதிப் படங்களுக்கு பெரிய பலம். அந்தவகையில் இசையமைப்பாளரை பாராட்டலாம். வந்து விழுகிற வார்த்தை மழைகளுக்கு நடுவில் ஒளிப்பதிவை யார் பார்த்தார்கள். வார்த்தையை வைத்து வண்டி ஓட்டுகிற படங்களில் வந்து போகிற கதாபாத்திரங்கள் பளிச்சென்று தெரிந்தால் போதாதா.
ரொம்ப விளையாட்டா எடுத்திருக்கிறார்கள். ரசிகனும் விளையாட்டா பார்த்துப் போகிறான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.