ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரன் என்ற நேர்கோட்டு கதை சொல்லலிலிருந்து தமிழ் சினிமா நான் லீனியருக்கு மாறியிருக்கிறது. தேங்க் காட். ஆரண்ய காண்டத்துக்கும் இதற்கும் ஆறு வித்தியாசங்கள் இருப்பது போலவே ஆறு ஒற்றுமைகளும் உண்டு.
சின்ன வயதில் தெரியாமல் அம்மாவுக்கு விஷத்தை கொடுக்கும் மகன் அதற்கு காரணமான அப்பனுக்கு தெரிந்தே விஷத்தை கொடுக்கிறான். இந்த ஒற்றை வரிக்குள் ஊடுபாவாக வருகின்றன ஏராளமானவர்களின் கதைகள்.
படத்தில் தூள் விற்கிறார்கள், பீர் குடிக்கிறார்கள், பெண்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள், கொலை செய்கிறார்கள், கொல்லப்படுகிறார்கள்... ஏ..யப்பா இது சென்னையா இல்லை பாங்காங்கின் ஏதாவது சேரியா.
பாலாஜிக்கு தம்பி கார்த்திக்தான் உலகம். அப்பன்கூட சோராதடா ஆபத்தாயிடும் என்று தம்பியை எச்சரிக்கிறான். அப்பனுக்கு புள்ளையும் ஒன்றுதான் தொழில் செய்யும் பெண்களும் ஒன்றுதான். சுயநலத்துக்காக யாரையும் போட்டுக் கொடுக்க தயங்காதவன். கல்லூரி செல்லும் தம்பிக்கு எதுவும் காதில் விழுவதில்லை. போதாததுக்கு வானமே எல்லையாக திரியும் விஷ்ணுவின் நட்பு.
ஒருகட்டத்தில் கார்த்திக் கொலை பழி சுமக்க நேர்கிறது. கொலை செய்தது யார்? அதற்கு காரணமானவர்கள் யார் யார்? மர்மங்களை அவிழ்க்கும் விதத்தில் சபாஷ் பெறுகிறார் அறிமுக இயக்குனர் அஞ்சனா.
பாலாஜியாக வரும் முத்துக்குமார் அண்ணன் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். விஷம் கலந்த பிராந்தி குடித்து தண்ணிக்கு தகப்பன் தவிக்கும் போது முகம் திருப்பிக் கொள்கிறாரே..… சுரீர் எக்ஸ்பிரஷன். தம்பியாக வரும் நானி உடல் மொழியிலும் முக பாவத்திலும் சென்டம் அடிக்கிறார். இவரது காதலியாக நித்யாமேனன். குள்ளம் என்றாலும் கொள்ளை அழகு. இப்படியே யோசிச்சிட்டிரு… நான் ஏதாவது செய்யப் போறேன் என்று காதலன் கம்பிக்குப் பின்னால் இருக்கும் சோகத்தை கோபமாக குமுறும் போது பிடித்துப் போகிறார்.
விஷ்ணு கேரக்டர் கார்த்திக்குக்கு கிடைத்த கிஃப்ட். நித்யாமேனனை மக்கு என்று வாரும் போதும் சரி, தனது காதலியுடன் இன்னொருவன் படுத்துவிட்டு வரும் போது இயலாமையில் முகம் கறுக்கும் போதும் சரி... பிரமாதப்படுத்துகிறார். அவரின் முடிவு பரிதாபம்.
பாலியல் தொழிலாளியாக பிந்து மாதவி. சென்டிமெண்ட் சேறு தேயக்காமல் இயல்பாக இந்த வேடத்தை உருவாக்கியதற்கு இயக்குனருக்கு தனி பொக்கே தரலாம். அம்மாஜியாக வரும் ஜெனிஃபர் முதற்கொண்டு சின்ன கேரக்டரும் தனித்துவம் காட்டுகிறார்கள்.
அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஜஸ்ட் லைக் தட் இரண்டு பெரும் நிழல் உலக தாதாக்களின் கும்பலை கொலை செய்வதைதான் ஜீரணிக்க முடியவில்லை. என்ன செய்வது படத்தை முடிக்க வேண்டுமே.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்தின் முதுகெலும்பு. ஒவ்வொரு ஃபிரேமிலும் இவர்களின் உழைப்பு தெரிகிறது. ஜோஸ்வா ஸ்ரீதருக்கு இந்தப் படம் நல்ல ரீ எண்ட்ரி. பாடல்களும் அதை காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் அருமை.
கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவது, மர்மங்களுக்கான முடிச்சுகளை தயார் செய்வது என்று முற்பகுதி ஒன்றுமில்லாமல் நகர்வதை மட்டும் சரி செய்திருந்தால் வெப்பத்தின் ஹீட் இன்னும் கூடியிருக்கும்.
அறிமுக இயக்குனர் என்ற வகையில் அஞ்சனாவை ஓ போட்டு வரவேற்கலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.