மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ICC அட்டவணையில் IPL கிரிக்கெட்டிற்கு இடம் கிடையாது - லார்கட்

ICC அட்டவணையில் IPL தொடருக்கு இடம் அளிக்க முடியாது என்று ICC. அறிவித்து உள்ளது.

இந்தியாவில் 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டிக்கு ரசிகர்களின் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள்.

ஆனால் IPL. போட்டி நடக்கும் சமயத்தில் சில அணிகளுக்கு சர்வதேச போட்டிகளும் வருவதால் அந்த அணி வீரர்களால் IPL.-ல் முழுமையாக பங்கேற்க முடிவதில்லை.

இந்த முறை IPL. போட்டி நடந்த போது கூட இங்கிலாந்து வீரர்கள் பாதியில் கிளம்பினர். ஆஸ்திரேலிய வீரர்கள் பிற்பகுதியில் தான் IPL.-ல் இணைந்தனர்.

எனவே IPL போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) போட்டி அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது.

அப்படி சேர்க்கும் போது வெளிநாட்டு வீரர்கள் IPL-ல் பங்கேற்பதில் எந்த இடையூறும் இருக்காது.

ஆனால் இந்தியாவின் கோரிக்கையை ICC மீண்டும் ஒரு முறை நிராகரித்து உள்ளது. எதிர்காலத்தில் IPL தொடரை ICC அட்டவணையில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க மாட்டோம் எனறு ICC திட்டவட்டமாக கூறியிருக்கிறது.

இது குறித்து ICC.யின் தலைமை செயல் அதிகாரி ஹரூன் லார்கட் மெல்போர்னில் நேற்று அளித்த பேட்டியில், IPL போட்டியை, ICCயின் வருங்கால போட்டி அட்டவணையில் சேர்த்தால், அதன் விளைவாக ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் 20- ஓவர் கிரிக்கெட் லீக் போட்டியையும் இதே மாதிரி சேர்க்க வேண்டி இருக்கும்.

இதே போல் இலங்கையிலும் ஒரு பிரிமியர் லீக்கை தொடங்குகிறார்கள். வங்காளதேசத்திலும் 20 ஓவர் கிரிக்கெட் லீக் நடக்கிறது.

இவர்களும் இதே கோரிக்கையை முன் வைத்தால் நாங்கள் என்ன செய்வது? IPL போட்டியை முதன்மையான பிரிமியர் லீக் என்று மக்கள் சொல்லலாம். அதனை ICC அட்டவணையில் சேர்க்கும் விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட உறுப்பினருக்கு (இந்தியாவுக்கு) சலுகை காட்டினால், பிறகு இதே சலுகையை மற்ற உறுப்பினர்களுக்கும் தர வேண்டி இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

இதனால் தான் இது போன்ற எந்த ஒரு உள்ளூர் லீக்குக்கும் நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை' என்றார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.