செவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில் சூரிய உதயத்தை அடிப்படையாக கொண்ட நேரம் நள்ளிரவு மணி 12.34க்கு 1.1.2013ஆம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி கற்பனை, காவிய கிரகமான சுக்ரனின் ஆதிக்கத்தில் (2+0+1+3=6) இந்தாண்டு பிறப்பதால் மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.
2013 புத்தாண்டு இராசி பலன்களை ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் தொகுத்து அளித்துள்ளார்.
2013 புத்தாண்டு இராசி பலன் : மேஷம்!
இனிய வார்த்தைகள் இரும்புக் கதவையும் திறந்துவிடும் என்பதை புரிந்த நீங்கள் சுவையான பேச்சில் சொக்க வைப்பீர்கள். இந்த புத்தாண்டு பிறக்கும் போது சுக்ரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலட்ரானிஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். தங்க ஆபரணம்,விலையுயர்ந்த ஆடை வாங்குவீர்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணியை தொடங்க வங்கி லோன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். உங்களுக்கு சுக வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்தி என வீடு களைக்கட்டும். கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீர்கள். பழைய சொந்தம் பந்தஙகள் தேடி வருவார்கள்.
வருடம் ஆரம்பிக்கும் போது செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். ஒரு சொத்தை விற்று பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதர சகோதரிகள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
மனைவிவழி உறவினர்களால் உதாசீனப்படுத்தப்பட்டீர்களே! இனி மாமனார், மாமியார், மச்சினர் மதிப்பார்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். உங்களை அழுத்திக் கொண்டிருந்த தாழ்வுமனப்பான்மை விலகும்.
12.10.2013 முதல் டிசம்பர் முடிய கேதுபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால் அசுவனி நட்சத்திரக்காரர்கள் இக்காலக்கட்டத்தில் விபத்துகள், ஏமாற்றங்களை சந்திக்க வேண்டி வரும்.
3.2.2013 முதல் 11.10.2013 வரை பரணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் பரணி நட்சத்திரக்காரர்கள் இக்காலக்கட்டத்தில் மனஉளைச்சல், ஆரோக்ய குறைவுகளை சந்திக்க வேண்டி வரும்.
1.1.2013 முதல் 2.2.2013 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால் இக்காலக்கட்டத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
10.4.2013 முதல் 26.5.2013 வரை உள்ள காலக்கட்டத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பாவ கிரகங்களின் பார்வை சேர்க்கையால் பலவீனமடைவதால் வீடு, மனை வாங்குவது, மற்றும் பண விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்.
மே 28-ந் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் தொடர்வதால் எதிர்பார்த்த வகையில் உதவிகளும், திடீர் பணவரவு உண்டு. ஆனால் செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கோவில் கோவிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தைபாக்யம் உண்டாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை உணர்வார்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள்.
மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிரும், புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். சாமர்த்தியமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் தராதரத்தை புரிந்து கொள்ளுவீர்கள். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்களை முயன்று தவறி முடிக்க வேண்டி வரும். மன தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். என்றாலும் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வசதி, செல்வாக்குடன் உள்ள தவறானவர்களுடன் நட்புறவாட வேண்டாம்.
வருடம் முடியும் வரை ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் தொடர்வதால் சாதிக்க வேண்டுமென்ற வைராக்கியம் வரும் ஆனால் எதையும் முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிலர் உங்களை புகழ்வதைப் போல் பேசி உங்களின் திறமையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். மற்றவர்கள் சில ஆலோசனைகள் கூறினாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து, சிக்கனமாக இருக்கப்பாருங்கள்.
குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வந்துபோகும். மனைவி, பிள்ளைகளை அரவணைத்துப் போங்கள். எல்லாவற்றிலும் உங்களின் நேரடி கவனம் இருப்பது நல்லது. மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பை சிதைவு வரக்கூடும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென நினைத்த புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலத்திற்கு சென்று வருவீர்கள். ஆனால் ராசிக்குள் கேது நிற்பதால் எதிலும் ஒரு சலிப்பு, டென்ஷன், தலைச்சுற்றல், சோர்வு, காய்ச்சல், தூக்கமின்மை வந்து போகும். சேமிப்புகள் கரையும். சிலரால் நீங்கள் ஏமாற்றப்படக் கூடும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை வந்து நீங்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள்.
வருடம் முழுக்க ராசிக்கு 7-ம் வீட்டில் சனி நிற்பதால் இனி எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க விடாதீர்கள். புதிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உங்கள் சில காரியங்கள் இழுபறியாகி முடியும். நம்பிக்கைக்குரியவராக இருந்தாலும் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வெளிவட்டாரத்தில் உஷாராக பழகுங்கள். நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை தரம் பிரித்துப் பார்க்க முடியாமல் தடுமாறுவீர்கள். முன்பு போல கேட்டவர்களுக்கெல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்காதீர்கள்.
வருங்காலத்தை மனதில்கொண்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தலை தூக்கும். உப்பு சப்பில்லாத விஷயத்திற்கு கூட மனைவியுடன் சண்டை சச்சரவுகள் வரும். விட்டுக் கொடுத்து போவது நல்லது. மனைவிக்கு அறுவை சிகிச்சை வரக்கூடும். மனைவி வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். மகனுக்கோ, மகளுக்கோ வாழ்க்கைத்துணை தேடுபவர்கள் நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் அதிகம் இடைவெளி தராமல் உடனே முடிப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். தோலில் நமைச்சல், அலர்ஜி, செரிமானக் கோளாறு, வாயுக்கோளாறால் நெஞ்சு வலியும் வந்து நீங்கும். நேரங்கடந்து சாப்பிடுவதை முதலில் தவிர்க்கவும்.
கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். தடைபட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். புதிய வேலை கிடைக்கும். மாணவர்களே! ஏனோ தானோ என்று படிக்காமல் முழு கவனத்தையும் செலுத்துங்கள். நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அநாவசியமாக மேலிடத்தைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.
வியாபாரிகளே! அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்களை சேர்ப்பீர்கள். நன்கு அறிமுகமானவர்களானாலும் கடன் தரவேண்டாம். புரோக்கரேஜ்,ஏஜென்ஸி வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். என்றாலும் லாபம் உண்டு. உணவு, இரும்பு,கட்டிட பொருட்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கப்போய் சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும். என்ன தான் இரவு பகலாக உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். விரும்பமில்லாத இடமாற்றம் உண்டு. மேலதிகாரியுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் இருந்தாலும் அனுசரித்துப் போங்கள். கலைஞர்களே! புதிய நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும். உங்கள் வெற்றி தொடரும். அரசு பாராட்டும்.
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதுடன், முன்கோபத்தையும், வீண் சந்தேகத்தையும், இரவு நேரப் பயணங்களையும் தவிர்க்க வேண்டிய வருடமிது.
பரிகாரம்:
ஏதேனும் ஒரு ஏகாதசி திதி நாளில் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்குங்கள்.
2013 புத்தாண்டு இராசி பலன் : ரிஷபம்!
சுற்றியிருப்பவர்களின் சுகத்திற்காக தன்னை அற்பணித்துக் கொள்ளும் நீங்கள், பல நேரங்களில் தாமரை இலைத் தண்ணீர் போல் இருப்பீர்கள். இந்த புத்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பாதிபணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.
மகளின் கல்யாணத்திற்காக வரன் தேடி ஓய்ந்தீர்களே! இனி நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் நல்ல மணமகன் அமைவார். கல்யாணத்தை வி.ஐ.பிகள் முன்னிலையில் நடத்துவீர்கள். சகோதரிக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். தந்தையார் சில நேரங்களில் கோபப்படுவார். நவீன ரக மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.
உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வெகுநாட்களாக வழக்குகள் இழுபறியாகிக் கொண்டிருந்ததே! இனி சாதகமாக முடியும்.
மே 28-ந் தேதி வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு அமர்ந்து ஜென்மகுருவாக நீடிப்பதால் அடிக்கடி கோபப்பட்டுக் கொள்வீர்கள். சில சமயங்களில் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். திட்டவட்டமாக செயல்பட முடியாமல் தடுமாறுவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலை தூக்கும் போதெல்லாம் அதை தட்டி வைக்கப்பாருங்கள். உங்களைப் பற்றி எல்லோரும் தவறாக நினைப்பதாக நீங்களே முடிவெடுத்துக் கொள்ளாதீர்கள். ஒற்றைத் தலை வலி, சுவாசக் கோளாறு, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு, கால்சியம் சத்துக் குறைவு என வரக்கூடும். நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது.
குற்றம் குறை பார்த்தால் சுற்றம் ஏதும் இல்லை. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க முக்கிய நிகழ்ச்சிகளை தவிர மற்ற விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. பாதை மாறிச் செல்பவர்களின் நட்பை தவிர்த்து விடுங்கள். ஆனால் 29.5.2013 முதல் குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்வதால் கோபம் குறைந்து கனிவு பிறக்கும். கடுமையாக பேசாமல் இங்கிதமாகவும், இதமாகவும் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள்.
பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒத்துக்கித்தள்ளுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை, வருங்காலம் குறித்த பயமெல்லாம் விலகும். பிள்ளைகளை நீங்கள் எதிர்பார்த்த நல்ல பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு.
இந்த வருடம் முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே பலம் பெற்று நீடிப்பதால் பிரச்சனைகள் எதுவானாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும். முடங்கியிருந்த நீங்கள், இனி முன்னேற்றப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானம் உயரும். வாங்கிய கடனில் வட்டியை மட்டுமே கட்டிக்கொண்டிருந்தீர்களே! இனி அசலில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள், வீடு வந்து சேரும். நாடாளுபவர்கள், வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அடிக்கடி தொந்தரவு தந்த வாகனம் இனி சீராக ஓடும். ஆனால் 10.5.2013 முதல் 6.7.2013 வரை உடல் உஷ்ணம் அதிகமாகும். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.
இந்த ஆண்டு முழுக்க உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். உங்களை கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் முழுமையடையும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
12-ம் வீட்டில் கேது தொடர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் என வீடு களை கட்டும். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சில காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். யாருக்கும் ஃபைனான்ஸ் மூலம் பணம் வாங்கித் தரவோ, பொறுப்பேற்கவோ வேண்டாம். பெரிய பதவிகள் தேடி வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும்.
கன்னிப்பெண்களே! அடிக்கடி முகம் சோர்ந்து காணப்பட்டீர்களே, ஏதோ இனந்தெரியாத கவலை உங்களை வாட்டியதே, இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தோழிகளுக்கெல்லாம் திருமணமாகி விட்டதே! நமக்கு இன்னும் ஆகவில்லையே என வேதனைப்பட்டீர்களே! இனி கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். தாயாருடன் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்ததே! அந்த நிலை மாறும். தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும்.
மாணவர்களே! அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டுகளை பெறுவீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் எடுத்து பெற்றோரின் தலை நிமிரும்படியாக செய்வீர்கள்.
அரசியல்வாதிகளே! புதிய பொறுப்புகளை தலைமை ஒப்படைக்கும். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆதாரமில்லாமல் எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம்.
வியாபாரிகளே! உங்களுக்கு பின்னால் தொழில் தொடங்கியவர்கள் கூட முன்னேற்றமடைந்தார்களே! வட்டிக்கு வாங்கி கடையை விரிவுபடுத்தி நட்டப்பட்டீர்களே! இனி உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். திடீர் லாபம்,பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடிவரும். மருந்து, உணவு,ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது பிரச்சனை செய்தார்களே! இனி பணிந்து போவார்கள்.
உத்தியோகஸ்தர்களே! பணிகளை முடிப்பதிலிருந்த தேக்கநிலை மாறும். மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வருட தொடக்கத்திலேயே பதவியுயர்வு,சம்பள உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டுத்தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினி துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும்.
கலைத்துறையினர்களே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அரசால் ஆதாயமுண்டு.
இந்த 2013-ம் ஆண்டு உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், பிற்பகுதியில் சாதனையாளராகவும் மாற்றும்.
பரிகாரம்:
ஏதேனும் ஒரு கிருத்திகை நட்சத்திர நடைபெறும் நாளில் அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள்.
2013 புத்தாண்டு இராசி பலன் : மிதுனம்!
செய்நன்றியை ஒருபோதும் மறவாத நீங்கள், தன்னை எதிரியாக நினைத்தவர்களுக்கும் நல்லதே நினைக்கும் குணம் படைத்தவர்கள். உங்களுக்கு 2-வது ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவ பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும்.
தடைபட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். கணவன்- மனைவிக்குள் இனி மனம் விட்டுப் பேசுவீர்கள். வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள்.
வருடம் பிறக்கும் போது ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் அதிகரிக்கும். மகளுக்கு வரன் தேடும் போது மணமகனின் பழக்கவழக்கங்களை விசாரித்து முடிவெடுப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். ஒற்றை தலை வலி, இரத்த சோகை, மூட்டு வலி வரக்கூடும். தாய்மாமன்,அத்தை வகையில் செலவுகள் வந்துப் போகும். எல்லோரையும் சந்தேகக் கண்ணுடன் தான் பார்ப்பீர்கள். இப்படி நடந்திருக்குமோ! அப்படி சொல்லியிருப்பார்களோ! என்றெல்லாம் நினைத்து குழம்புவீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள்.
தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்களும் வந்து செல்லும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். கேது 11-ம் வீட்டில் தொடர்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். கைமாற்றாக இருந்த கடனையும் தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வேற்றுமொழி, மதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வி.ஐ.பிகள்,தொழிலதிபர்களின் நட்பை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.
சனிபகவான் ராசிக்கு 5-ம் வீட்டில் தொடர்வதால் பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் பேசுவார்கள். அவர்களின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து நிறைவேற்ற பாருங்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு அவர்களை பிரிய வேண்டியது வரும். தாய்மாமன் வகையில் செலவுகளும், சின்னசின்ன மனஸ்தாபங்களும் வந்து போகும். குலதெய்வக் கோவிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள்.
மே 28-ந் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் அநாவசிய செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். பூர்வீக சொத்தில் பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடியும். சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும். சின்ன சின்ன வேலையை முடிப்பதில் கூட சிக்கல்கள் இருந்ததே! இனி முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். வாகன வசதி பெருகும்.
வெகுநாட்களாக போக நினைத்தும் தடைபட்டுக் கொண்டிருந்ததே! இப்பொழுது குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உதவுவார்கள். மே 29-ந் தேதி முதல் குருபகவான் வருடம் முடிய உங்கள் ராசிக்குள்ளேயே ஜென்மகுருவாக அமர்வதால் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். தேனொழுக பேசுகிறார்கள் என்று யாரையும் நம்பி விட வேண்டாம்.
அடிக்கடி கோபப்பட்டு டென்ஷனாவீர்கள். உணவில் உப்பு, காரத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் காமாலை வரக்கூடும். காய்ச்சிய நீரை அருந்துங்கள். லாகிரி வஸ்துகளை பயன்படுத்துபவர்கள் இனி அவற்றை அறவே தவிர்க்க வேண்டும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும். பிள்ளைகள் சில நேரங்களில் உங்களை புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள்.
உணர்ச்சிவசப்படாமல் எந்த முடிவும் எடுப்பது நல்லது. குடும்பத்தில் சுபச் செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும். செரிமானக் கோளாறு, தலைச் சுற்றல் வரக்கூடும். விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வீடுகட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவிற்கு தர்ம சங்கடத்தில் மூழ்கக் கூடும்.
ராசிக்கு 6-ம் வீட்டில் சுக்ரன் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். குடிநீர், கழிவு நீர் குழாய் அடைப்பு வரும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் பழுதாகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சளித்தொந்தரவு இருக்கும். சைனஸ் இருப்பதைப் போன்ற லேசாக தலை வலி வந்துப் போகும். அநாவசியவச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள்.
செவ்வாய் 8-ல் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உடன்பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் வரும். சொத்து விஷயங்களை சுமுகமாக பேசித் தீர்க்கப் பாருங்கள். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, கருத்துமோதல் வரக்கூடும். பழைய வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை அடிக்கடி பேசவேண்டாம். அண்டை அயலாருடன் அளவாக பழகுங்கள்.
கன்னிப்பெண்களே! உயர்கல்வியில் அலட்சியப் போக்கு வேண்டாம். காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். பெற்றோரின் ஆலோசனைக்கு முக்கியத்துவமளியுங்கள். உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி, வேனல் கட்டி வந்து நீங்கும். மாணவர்களே! ஏனோ தானோ என்றில்லாமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கணிதம், அறிவியல் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். விடைகளை எழுதி பாருங்கள். கூடா நண்பர்களை தவிர்த்து நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகளே! உட்கட்சிப் பூசலில் தலையிடாமல் ஒதுங்கியிருங்கள். தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு கொண்டு செல்லுங்கள். இருக்கும் பதவியை தக்க வைத்துக் கொள்ள கொஞ்சம் போராட வேண்டிருக்கும்.
வியாபாரிகளே! பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்க புது திட்டங்களை செயல்படுத்துவீர்கள். மற்றவர்கள் சொல்கிறார்கள் என நினைத்து பெரிய முதலீடுகளை போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். தொல்லை கொடுத்த வேலையாட்கள் மாற்றிவிட்டு அனுபவமிகுந்தவர்களை பணியில் அமர்த்துவீர்கள். ஸ்டேஷ்னரி,பப்ளிக்கேஷன், உணவு, எலக்ட்ரிக்கல்ஸ்,டிராவல்ஸ்,கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். சங்கத்தின் சார்பில் கௌரவப்பதவிகள் தேடி வரும். உங்களிடமிருந்து பிரிந்து சென்ற அனுபவமிக்க வேலையாட்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! வருட முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றங்களும் வரும். மேலதிகாரியின் தவறுகளை மேலிடத்திற்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சக ஊழியர்கள் உங்களை உரசிப் பார்ப்பர்கள். பிற்பகுதியில் மன நிம்மதியுண்டு. சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். கணினி துறையினர்களே! புதிய வாய்ப்புகள் வந்தால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.
கலைத்துறையினர்களே! தள்ளிப் போய்க் கொண்டிருந்த வாய்ப்பு இனி தேடி வரும். உங்களின் படைப்புகளைப் பற்றி கிசுகிசுக்கள் வரத்தான் செய்யும்.
இந்த 2013-ம் ஆண்டு அவ்வப்போது உங்களை மட்டம் தட்டப்பார்த்தாலும் விடாமுயற்சியாலும், தொலைநோக்குச் சிந்தனையாலும் முன்னேற வைக்கும்.
பரிகாரம்:
அமாவாசை திதி நடைபெறும் நாளில் ஸ்ரீபிரத்யங்கரா தேவியை வணங்குங்கள்.
2013 புத்தாண்டு இராசி பலன் : கடகம்!
தும்பைப் பூப்போல சிரிப்பு, துடிப்பான செயல்திறனும் கொண்ட நீங்கள், நம்பி வந்தவர்களை ஒருபோதும் கை விட மாட்டீர்கள். மே 28-ந் தேதி வரை குருபகவான் லாப வீட்டில் நிற்பதால் பிரபலங்கள், நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் உடனே முடியும். குடும்பத்தில் இனம் புரியாத கவலை, வாக்குவாதங்கள் என இருந்ததே! இனி வீட்டில் மகிழ்ச்சி தங்கும். வருமானத்தை உயர்த்த புதுவழிகளில் முயற்சி செய்வீர்கள்.
திடீர்யோகம், பணவரவு உண்டு. நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும். பழைய கடனில் ஒருபகுதியை தீர்க்க வழி பிறக்கும். மூத்த சகோதரர் முன்வந்து உதவுவார். உங்களையும் அறியாமல் உங்களிடம் இருந்து வந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும். இனி நேர்மறை எண்ணங்கள் உருவாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். பெரிய பதவிகள் தேடி வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடர்வீர்கள். தூரத்து சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவ முன்வருவார்கள்.
ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சென்று மறைவதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். நன்கு அறிமுகமாகாதவர்களை வீட்டில் சேர்க்க வேண்டாம். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சகோதரங்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சுக்ரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும். நாள்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை இனி கைக்கு வரும். கனிவானப் பேச்சால் காரியம் முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீட்டிற்குள் நுழைந்தாலே ஒரு போர்களம் போல் தெரிந்ததே, இனி குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
மனைவிவழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகளுக்காக எதையும் சேர்த்து வைக்க வில்லையே என்று புலம்பிவீர்களே, இனி அவர்களுக்காக சொத்து சேர்ப்பீர்கள். அவர்களின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். மகன் உங்களைப் புரிந்துக் கொள்வாள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலைக் கிடைக்கும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார்.
கண்டும் காணாமல் இருந்த உறவினர்கள் எல்லாம் இனி உங்களின் வளர்ச்சியை பார்த்து வலிய வந்துப் பேசுவார்கள். அவர்களின் வீட்டு விசேஷங்களில் முன்னுரிமை கிடைக்கும். பாதியிலேயே நின்றுபோன வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். என்றாலும் உங்கள் ராசியிலேயே இந்த புத்தாண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். அவ்வப்போது உடல்நிலை லேசாக பாதிக்கும்.
பிள்ளைகளிடம் அதிக நேரம் பேசி அவர்களின் அடிமனதிலிருக்கும் தாழ்வுமனப்பான்மைகளை குறைக்கப்பாருங்கள். அவர்களின் உயர்கல்வியில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். மகனுக்கு நல்ல வரன் அமையும். நினைத்தபடி வேலை கிடைக்கும். மகளுக்கு அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பு கிட்டும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். வேற்றுமதத்தினர்கள் உதவுவார்கள். இந்தாண்டு பிறக்கும் போது 7-ல் செவ்வாய் நிற்பதால் மனைவியுடன் விவாதங்கள்,சந்தேகம்,பிரிவு வரும். முன்கோபத்தை குறைக்கப்பாருங்கள். உடன்பிறந்தவர்களால் மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் கவனம் தேவை.
6-ம் வீட்டில் சூரியன் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். சொத்து சேரும். தடைபட்ட காரியங்களை முழுவேகத்துடன் முடித்துக் காட்டுவீர்கள். வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். துவண்டிருந்த உங்கள் முகம் பிரகாசிக்கும். கடுமையாக உழைத்து கையில் காசுபணம் சேரவில்லையே என புலம்பித்தவித்தீர்களே! இனி சேமிக்கத்தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வேலை கிடைக்கும்.
தகப்பானருடன் இருந்த கருத்து மோதல் நீங்கும். தந்தை வழி சொத்தை அடைவதில் இருந்த தடைகள் விலகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீகத்தின் ஆழத்திற்கு செல்வீர்கள். கோவில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு உண்டு. நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவிக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவும், மருத்துவச் செலவும் வந்துபோகும்.
இந்த வருடம் முழுக்க ராசிக்கு 4-ம் வீட்டில் சனியும், ராகுவும் அமர்ந்திருப்பதால் தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தம் வரும். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும்,மனக்கசப்பும் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வாகனம் விபத்துக்குள்ளாகும். வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். நெடுந்தூர, இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. யாருக்கு ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். நண்பர்களுடன் வீண் பேச்சைக் குறைக்கப்பாருங்கள். இலவசமாக அறிமுகமாகும் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள்.
கன்னிப் பெண்களே! முடிவெடுக்கமுடியாமல் திணறினீர்களே! இனி சுயமாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள். போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். வேலை கிடைக்கும். தோலில் நமைச்சல், தேமல் நீங்கும். தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும். மாணவர்களே! ஏனோ தானோ என்று படிக்காமால் அதிக நேரம் ஒதுக்கி படியுங்கள். விடைகளை எழுதிப்பாருங்கள். வகுப்பறையில் அரட்டைப் பேச்சு வேண்டாம். நண்பர்களுடன் மோதல்கள் வந்துப் போகும். விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.
அரசியல்வாதிகளே! தலைமையுடன் நெருக்கமாக இருந்தாலும் அவரின் சொந்த விஷயங்களில் தலையிடாமலிப்பது நல்லது. சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
வியாபாரிகளே! வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த பிட் நோட்டிஸ், வானொலி விளம்பரம் என செலவிடுவீர்கள். பக்கத்து கடைக்காரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். வேலையாட்களின் தொந்தரவு குறையும். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். பங்குதாரர்களின் துரோகங்களை மறந்து பழைய நிலைக்கு திரும்புவீர்கள். பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். தொல்லை கொடுத்த வேலையாட்கள் மாற்றிவிட்டு அனுபவமிகுந்தவர்களை பணியில் அமர்த்துவீர்கள். புதிய தொழிலில் கால்பதிக்கும் முன்பு அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை செய்யுங்கள்.
உத்தியோகஸ்தர்களே! இழுபறியாக இருந்த பதவியுயர்வு இப்போது கிடைக்கும். மேலதிகாரி உங்களிடம் சிலநேரங்களில் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த பனிப்போர் நீங்கும். கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வருவீர்கள். வேறு சில வாய்ப்புகளும் வரும். மறுக்கப்பட்ட உரிமைகளை பெற சிலர் நீதிமன்றம் செல்ல வேண்டி வரும். கணினித்துறையினர்களே! அயல்நாட்டு தொடர்புடைய புதிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். சலுகைகள் அதிகரிக்கும்.
கலைத்துறையினர்களே! வீண் வதந்திகளால் ஒதுங்கியிருந்த நீங்கள், இனி உற்சாகமாகி தடைபட்ட வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். பழைய நிறுவனங்கள் உங்களை அழைத்து பேசும்.
சமயோஜித புத்தியாலும், விட்டுக் கொடுக்கும் மனசாலும் சாதிக்கும் வருடமிது.
பரிகாரம்:
அருகில் சிவாலயங்களில் உங்கள் பைரவரை அஷ்டமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
2013 புத்தாண்டு இராசி பலன் : சிம்மம்!
எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்க எண்ணும் நீங்கள், யாருக்காகவும் எதற்காகவும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். புத்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்பதால் தொட்டது துலங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிரபலங்களால் சில வேலைகள் முடிவுக்கு வரும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். வெளிநாடு சென்று வருவீர்கள்.
இழுபறியாக இருந்த பூர்வீகச் சொத்துப் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். உங்களிடமிருந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். தாய்வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். தாய்மாமன், அத்தை வழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். ஆனால் உங்களுக்கு 12-வது ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலும், திடீர் பயணங்களும், அத்தியாவசியச் செலவுகளும் அதிகரிக்கும்.
தைரியஸ்தானமான 3-ம் வீட்டில் சனிபகவான் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகங்களை அனுபவிப்பீர்கள். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிக்கும் வல்லமை பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்தி சில பிரச்னைகளுக்கு எதார்த்தமான தீர்வு காண்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். வழக்கால் பணம் வரும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வெளிமாநிலத்தவர்களுடன் சேர்ந்து தொழில் செய்யும் யோகம் உண்டாகும்.
வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 3-ல் ராகு தொடர்வதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பெரிய பதவியில் அமருவீர்கள். பேச்சில் தடுமாற்றம் இருந்ததே, இனி பேச்சில் கம்பீரம் பிறக்கும். வாய்தா வாங்கி இதோ அதோ என்று இழுத்தடித்துக் கொண்டிருந்த வழக்கில்! இனி சாதகமான தீர்ப்பு வரும். பழைய சொந்த-பந்தங்களை சந்திப்பீர்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். அவர்களால் உதவிகளும் கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.ஷேர் மூலம் பணம் வரும்.
வேற்றுமதம், மொழி, இனத்தவரால் திடீர் திருப்பம் உண்டாகும். 9-ம் வீட்டில் கேது நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையாருக்கு நெஞ்சு வலி, மூட்டு வலி வந்துப் போகும். அவருடன் மனத்தாங்களும் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது கவனத்தை சிதற விடாதீர்கள். சிறு சிறு விபத்துகள் வரக்கூடும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கெல்லாம் சென்று வருவீர்கள். சொந்த ஊர் கோவில் திருவிழாவை சொந்த செலவில் நடத்துவீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும்.
28.5.2013 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் தொடர்வதால் அதுவரை நான்கைந்து வேலைகளை ஒன்றாக சேர்த்து பார்க்க வேண்டியது இருக்கும். உத்யோகத்திலும் மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். எனவே அலுவலகத்தில் அதிக பேச்சை தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள்.
பழைய கடன் பிரச்சனைகள் அவ்வப்போது மனசை வாட்டும். ஊர் பொது விவகாரங்களில் உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்வீர்கள். வங்கிக் காசோலையில் முன்பே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரவு அதிகரிக்கும். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல இருந்தீர்களே! அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார்.
பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கியில் லோன் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். தீவிரமாக வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலைக் கிடைக்கும். தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள்.
அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். சித்தர்கள், மகான்களின் ஆசி கிட்டும். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். மகனின் கல்யாணத்தை கோலாகளமாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வங்கிக் கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். வாடகை வீட்டிலிருந் சிலர் சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார் அடிக்கடி உங்களை குறை கூறினார்களே! இனி சமாதானக்கொடி பறக்கும். அவர்கள் வீட்டு கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.
கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தால் உயர்கல்வியில் மதிப்பெண்களை இழந்தீர்களே! இனி போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். வேலை கிடைக்கும். கண்ணுக்கழகான கணவர் வந்தமைவார். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. வெளிநாடும் செல்வீர்கள். மாணவர்களே! பள்ளியில் அரட்டையும், வீட்டில் விடிந்தும் குரட்டையும் என நேரத்தை வீணடித்தீர்களே! இனி படிப்பில் ஆர்வம் பிறக்கும். விளையாட்டிலும் பதக்கம் கிடைக்கும். அரசியல்வாதிகளே! வெறும் அறிக்கை மட்டும் போதாது, தொகுதி மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் அக்கறை காட்டுங்கள். எதிர்கட்சிக்காரர்களின் விமர்சங்களை கண்டுக்கொள்ளாதீர்கள்.
வியாபாரிகளே! பக்கத்து கடைக்காரருடன் தகராறு, சரக்குகள் தேங்கியதால் நட்டம் என தொடர் சிக்கல்களை சந்தித்தீர்களே! அந்த நிலை மாறும். சனி 3-ல் சாதகமாக இருப்பதால் அரசியல்வாதிகளின் உதவியால் கடையை விரிவுபடுத்துவீர்கள். பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்-. டெக்ஸ்டைல், மருந்து, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் கொட்டம் அடங்கும். உங்களின் ஆலோசனைக்கு தலையசைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கூடி வரும்.
உத்தியோகஸ்தர்களே! வீண் பழியால் மன உளைச்சலுக்குள்ளாகி தூக்கமிழந்தீர்களே! மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்த்தும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே! இனி அந்த அவலநிலை மாறும். நெடுநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவியுயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வருவீர்கள். உங்களின் தனித்திறமையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். மூத்த அதிகாரியிடமிருந்து அலுவலக ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
கலைத்துறையினர்களே! வருமென எதிர்பார்த்த வாய்ப்புகள் கூட நூலிழையில் தவறியதே! இனி பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். உங்களின் படைப்புத் திறன் வளரும்.
இந்த 2013-ம் ஆண்டு முணுமுணுத்துக் கொண்டிருந்த உங்களை முடிச்சூட்டி வைப்பதாக அமையும்.
பரிகாரம்:
ஏதேனும் ஒரு பிரதோஷ தினத்தில் அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவனையும், நந்தீஸ்வரரையும் வணங்கி வாருங்கள்.
2013 புத்தாண்டு இராசி பலன் : கன்னி!
எளிமையான வாழ்க்கையும், எதார்த்தமான பேச்சும் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் வருமானம் உயரும். வருங்காலத் திட்டங்கள் பூர்த்தியாகும். கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோவில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். அண்ணனுக்கு திருமணம் சிறப்பாக முடியும்.
தம்பியுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். அரைகுறையாக நின்று போன வீடு கட்டும் வேலையை இனி விரைந்து முடிப்பீர்கள். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கல்யாணம், காதுகுத்தி, மஞ்சள் நீராட்டு, கிரகப்பிரவேசம் என பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதைக் கிடைக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். கோவில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். அதிக மைலேஜ் தரக் கூடிய வாகனம் வாங்குவீர்கள்.
குருபகவான் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். சொத்து வாங்க பாதி பணம் தந்து மீதி பணம் தேடினீர்களே! இனி அது கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீட்டிலிருப்பவர்கள் இனி உங்களின் அறிவுரையை கேட்டு நடப்பார்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பிள்ளை பாக்கியமும் கிடைக்கும்.
வீட்டில் தடைபட்ட கல்யாணம், கிரக பிரவேசம் நல்ல விதத்தில் நடக்கும். எந்த வேலையையும் முதல் முயற்சியிலேயே முடியாமல் போனதே! இனி மனபலத்தால் சாதிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். நெஞ்சு வலியால் சோர்ந்திருந்த தந்தையாரின் உடல் நிலை சீராகும். பேச்சு வார்த்தையில்லாமல் தனித்திருந்த அப்பா இனி உங்களுடன் சேர்ந்துக் கொள்வார். வங்கியில் வாங்கியிருந்த கடனை அடைப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கைக்கூடி வரும்.
மே 29-ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் ஓய்வெடுக்க முடியாமல் அடுத்தடுத்து வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். எதிலும் அலட்சியமாக இல்லாமல் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் பாக்கி வைக்காதீர்கள்.
யாருக்கும் கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். முக்கிய பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றம் வரும். அவசரப்பட்டு வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டாம். அரசு அங்கீகாரம் இல்லாத வங்கிகளில் வைப்புத் தொகை வைக்க வேண்டாம். தாயாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். அவருடன் பிணக்குகளும் வந்துச் செல்லும்.
செவ்வாய் 5-ம் வீட்டில் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளின் பொறுப்பில்லாத் தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அவர்களின் போக்கிலேயே சென்று திருத்தப்பாருங்கள். பிள்ளைகளை அவர்கள் விரும்பும் பாடப்பிரிவில் போராடி சேர்ப்பீர்கள். மகளுக்கு வரன் தேடும் விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் உணவு, மருந்து விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது.
வரம்பு மீறி யாரையும் விமர்சிக்க வேண்டாம். உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சலும், செலவுகளும் இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனையை முடிந்த வரை பேசித் தீர்ப்பது நல்லது. அடுக்கடுக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சொத்து விற்பது வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலேயே ராகுவும் தொடர்வதால் பேச்சில் அதிகம் கடுமை காட்டாதீர்கள். சில நேரங்களில் நீங்கள் விளையாட்டாக பேசப் போய் அது விபரீதமாக முடியும். குடும்பத்தில் சின்ன சின்ன கூச்சல் குழப்பங்கள் வந்து போகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று கவலைபடுவீர்கள். கேது 8-ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திண்டாடுவீர்கள்.
கை, காலில் காயம், வயிற்றுக் கோளாறு, மூட்டு வலி மற்றும் நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன பனிப்போர் வரும் என்றாலும் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. இருவரும் தங்கள் வழி சொந்தம் பந்தங்களை பெருமையாகப் பேசிக் கொண்டிருக்காதீர்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. ஆன்மீகம் நாட்டம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லப்பாருங்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.
இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பாதச் சனியாக தொடர்வதால் வீண் வாக்குவாதங்களையெல்லாம் தவிர்க்கப்பாருங்கள். பல் வலி வந்து போகும். காலில் அவ்வப் போது அடிபடும். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பொது இடங்களில் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். உள்மனதில் ஒருவித போராட்டம் எழும்பும். திடீர் பணவரவு, செல்வாக்கு எல்லாம் உண்டு. இருந்தாலும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும் இருக்கத்தான் செய்யும். சில விஷயங்களில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். உங்களின் நிதி நிலை தெரியாமல் உறவினர்கள், நண்பர்களில் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள்.
கன்னிப்பெண்களே! பொய்க் காதலை நினைத்து வருந்தாதீர்கள். உங்களின் படிப்புக்கும், தகுதிக்கும் ஏற்றாற்போல நல்ல மணமகன் அமைவார். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். மாணவர்களே! தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணமிருந்தால் மட்டும் போதாது, ஓயாது படித்து விடைகளை எழுதி பாருங்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சியினரின் கேள்விக்கு இடமளிக்காமல் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்பாருங்கள்.
வியாபாரிகளே! பொறுப்பாக செயல்பட்டு லாபத்தை பெருக்கப்பாருங்கள். பக்கத்துக் கடைக்காரரை பார்த்து பெரிய முதலீடுகளைப் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பங்குதாரர்களால் விரயம் வரும். ரியல் எஸ்டேட், கமிசன், அரிசி-எண்ணெய் மண்டி மூலம் லாபம் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள்.
மே 29-ந் தேதி முதல் குரு 10-ல் நுழைவதால் உத்யோகஸ்தர்களே! கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்தாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். புது வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. இடமாற்றம் இருக்கும்.
கலைஞர்களே! அரசால் பாராட்டப்படுவீர்கள். மூத்த கலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
அவசர முடிவுகளையும், ஆவேசப் பேச்சுகளையும் தவிர்த்தால் வெற்றியும், மகிழ்ச்சியும் தரும் வருடமிது.
பரிகாரம்:
ஞாயிற்று கிழமையில் ஸ்ரீசரபேஸ்வரரை நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.
2013 புத்தாண்டு இராசி பலன் : துலாம்!
உடுத்தும் உடையையும், உள்ளிருக்கும் மனசையும் வெள்ளையாக வைத்துக் கொள்ளும் நீங்கள் யாருக்கும் தீங்கு நினைக்கமாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடின உழைப்பால் சாதிப்பீர்கள். மனப்போராட்டங்கள் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். பழைய கடனை எவ்வாறு அடைக்கப்போகிறோமோ என்று முழி பிதுங்கி நின்றீர்களே! இனி அதற்கான வழி வகைகள் கிட்டும்.
பிள்ளைகளிடம் அவ்வப்போது கோபப்பட்டீர்களே! இனி அரவணைத்துப் போவீர்கள். மகனுக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போனதே! இப்பொழுது கூடி வரும். வருடம் பிறக்கும் போது செவ்வாய் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். நெருக்கமானவர்களுடன் மோதல், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்து தகராறுகள் வந்து செல்லும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள்.
மே 28-ந் தேதி வரை உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் குரு மறைந்திருப்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும் என்றாலும் திடீர் பணவரவும் உண்டு. சொந்த-பந்தங்களுக்காக சில சமயங்களில் அலைய வேண்டி வரும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும்.
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தோல்வி மற்றும் தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக அலைந்தீர்களே, கவலை வேண்டாம் அழகான வாரிசு உண்டாகும். அடிமனசில் இருந்த பய உணர்வு நீங்கும். பணப்பற்றாக்குறையினால் வீடு கட்டும் பணி பாதியிலே நின்று போனதே! இனி வங்கி கடனுதவியுடன் முழுமையாக வீடு கட்டி முடிப்பீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.
புது வேலைக்கும் முயற்சி செய்தீர்களே! இதைவிட அதிக சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வெகுநாள் கனவான புதிய நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீக சொத்தை சீரமைப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாட்டு பயணம் சாதகமாக அமையும். தந்தையின் உடல் நிலை சீராகும். அவருடன் இருந்த கருத்து மோதல்களும் விலகும்.
வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ், கௌரவம் உயரும்-. நீதிமன்ற வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சமாளிக்க முடியாத பிரச்சனைகளுக்கும் தீர்வுக்கு வரும். முதுகுவலி, சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். உங்கள் தகுதிக் கேற்ப நல்ல வேலை அமையும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உங்களை வாழ்த்தும். சாதுக்கள் உதவுவார்கள். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். அதிக சம்பளத்துடன் புதிய வேலைக் கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். செலுத்த வேண்டிய வரித்தொகைகளை உடனுக்குடன் செலுத்துவது நல்லது. வாகனத்தில் அடிக்கடி உதிரிபாகங்களை மாற்ற வேண்டியது வரும்.
ஜன்மச் சனி தொடர்வதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். ஜென்ரல் செக்கப் செய்து கொள்வது நல்லது. வறுத்த, பொரித்த மற்றும் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வரும். நாக்கைக் கொஞ்சம் கட்டுங்கள். மனைவிவழியில் கொஞ்சம் அலைச்சலும், செலவும் இருக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் சிலர் உங்களை குறை கூறுவார்கள்.
கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது வாக்குவாதங்கள் வரத்தான் செய்யும். அதை பெரிதுபடுத்த வேண்டாம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். நாடாளுபவர்கள், பிரபலங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். உடல் எடை கூடும். பணப்புழக்கம் இருந்தாலும் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.
வருடம் பிறக்கும் போது ராசிக்குள் ராகு நிற்பதால் தலைவலி, மயக்கம், குமட்டல், நாக்கில் கசப்பு என வந்து நீங்கும். சில சமயங்களில் முன்கோபத்தால் எடுத்தெறிந்து பேசுவீர்கள். நேரம் கிடைக்கும் போது யோகா, தியானம் செய்யத் தவறாதீர்கள். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. 7-ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை வரும். உங்கள் இருவருக்குள் பிரச்னையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். மற்றவர்கள் சொல்வதை கேட்டு மனைவி, மனைவிவழி உறவினர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கன்னிப்பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணருவீர்கள். தாயுடனான கருத்து வேறுபாடுகள் விலகும். இனி அந்த நிலை மாறும். ஆடை ஆபரணம் சேரும். கல்யாணம் விமர்சையாக முடியும். விட்ட பாடத்தை மீண்டும் எழுதி வெற்றி பெறுவீர்கள். மாணவர்களே! உங்களுடன் சுற்றித் திரிந்த நண்பர்கள் கூட நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறக்கூடும். எனவே விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துங்கள். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். அரசியல்வாதிகளே! ஓய்வெடுக்க முடியாதபடி தொகுதி வேலைகளை பார்க்க வேண்டி வரும். கட்சி அறிவிக்கும் போராட்டங்களில் பங்கேற்று தலைமையின் நன்மதிப்பை பெறுவீர்கள். என்றாலும் கட்சிக்குள் சில சதித்திட்டங்களும் நடக்கும்.
வியாபாரிகளே! சரக்குகளை நிரப்பிவைத்தும் வாங்குவார் யாருமில்லை என்ற நிலை மாறும். இனி சந்தை நிலவரங்களை விரல்நுனியில் வைத்துக் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்வீர்கள். பர்னிச்சர், மருந்து, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. அரசு கெடுபிடியெல்லாம் தளரும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த புது சலுகைகளை அறிவிப்பீர்கள். வேலையாட்கள் மற்றும் கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது குடைச்சல் தந்தார்களே! இனி பணிந்து போவார்கள். பழைய பங்குதாரர்களும் தேடி வருவார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். கணினி துறையினர்களே! வேலையில் திருப்தியில்லாமல் போகும். அயல்நாட்டு வாய்ப்புகள் வந்தால் யோசித்து ஏற்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களே! எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்த்தும் உங்களை குறை சொல்லுவதற்கென்றே ஒரு கூட்டம் இருந்ததே! இனி அந்த நிலை மாறும். உங்களின் மதிப்பு மரியாதை கூடும். பழைய பிரச்சனைகளை கிளறிவிட்டு சிலர் வேடிக்கை பார்த்தார்களே! அதெற்கெல்லாம் முடிவு கட்டுவீர்கள். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். அலுவலகச் சூழ்நிலை அமைதி தருவதாக இருக்கும். பதவியுயர்வையும் எதிர்பார்க்கலாம்.
கலைத்துறையினர்களே! எப்படியும் கிடைத்துவிடும் என காலம் கடத்திக் கொண்டிருந்தீர்களே! இனி பொறுப்பாக செயல்பட்டு சின்ன வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
இந்த 2013-ம் ஆண்டு ஆரோக்கிய குறைவையும், போராட்டத்தையும் தந்தாலும் ஓரளவு அந்தஸ்தையும் அதிகப்படுத்தும்.
பரிகாரம்:
வெள்ளிக் கிழமையில் குங்கும அர்ச்சனை செய்து ஸ்ரீமீனாட்சி அம்மனை வணங்குங்கள்.
2013 புத்தாண்டு இராசி பலன் : விருச்சிகம்!
மென்மையும், விட்டுக் கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவர்கள். வருடம் ஆரம்பிக்கும் போது செவ்வாய் 3-ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் புதிதாக வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சிலர் இருக்கும் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியதை தந்து முடிப்பீர்கள். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிய டிசைன் வண்டி வாங்குவீர்கள்.
மகனின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகள் பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். வி.ஐ.பிகள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள். சில நேரங்களில் உங்களையும் அறியாமல் சில தவறுகள் நேர்ந்ததல்லவா! இனி எதிலும் கவனமாக செயல்படுவீர்கள்.
உங்களுக்கு 9-வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப்பொலிவு, ஆரோக்யம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்தீர்களே, இபோது உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.
சுக்ரன் உங்கள் ராசிக்குள் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவசியச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். மனைவிவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தோலில் நமைச்சல் நீங்கும்.
புதிதாக வீடு, வாகனம் வாங்க எதிர்பார்த்த வங்கியில் கடன் உதவி கிடைக்கும். சிலர் வீட்டை புதுப்பித்துக் கட்டுவார்கள். மனஸ்தாபங்களால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
மே 28-ந் தேதி வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய சிக்கல்களை பேசி தீர்ப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தும் வீட்டில் விளையாட ஒரு குழந்தை இல்லையே என தவித்த பெற்றோருக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளால் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.
தள்ளிப்போன கல்யாணப் பேச்சுவார்த்தை கூடி வரும். மூத்த சகோதரிக்கு கல்யாணம் நடக்கும். ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் 8-ம் வீட்டில் மறைவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வரும். திடீர் செலவுகள் வந்துப் போகும். ஒரே நேரத்தில் நான்கைந்து வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் அநாவசியப்பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களும், அலைச்சல்களும் வந்துப் போகும். சித்தர் பீடங்களுக்கு மறவாமல் செல்லுங்கள். குலதெய்வ கோவிலை புதுப்பிப்பீர்கள்.
வருடம் முடியும் வரை ராகு 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் மறைமுக லாபம் உண்டு. மின்சார, சமையலறை சாதனங்கள் பழுதாகும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். திடீர் பயணங்களும், அலைச்சல்களும் அதிகரிக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். நெருங்கியவர்கள் சிலர் நீங்கள் ஒன்று சொல்ல அதை வேறு விதமாக நினைத்துக் கொண்டு உங்களை குறைகூறுவார்கள். இக்காலக் கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் அலட்சியம் காட்டாதீர்கள்.
வருடம் முழுக்க ராசிக்கு 6-ம் வீட்டில் கேது சாதகமாக இருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிப் பெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். காற்றோட்டம், குடிநீர் வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த வீட்டிலிருந்து எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். அரைகுறையாக நின்றுபோன பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய சொத்து வாங்குவீர்கள். நாடாளுபவர்கள், அரசு அதிகாரிகள் உதவுவார்கள். சொந்த ஊரில் செல்வாக்குக் கூடும். வெளிவட்டாரத்தில் விலகிச் சென்றவர்கள் இனி வலிய வந்துப் பேசுவார்கள். எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து, அயல்நாடு சென்று வருவீர்கள். ஹிந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும்.
வருடம் முடியும் வரை சனிபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் ஏழரைச்சனியின் ஒருபகுதியான விரையச் சனி தொடர்வதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். பழைய கடனை எவ்வாறு சமாளிக்கப் போகிறோமோ என்று கவலைப்படுவீர்கள். பணவரவு ஓரளவு இருக்கும். எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்டப் பெயர்தான் மிஞ்சும். சிலர் உங்களைப் பற்றிய வதந்திகளை பரப்பிவிடுவார்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
வாகனங்களை இயக்குவதில் கவனம் தேவை. அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவிற்கு தர்ம சங்கடத்தில் மூழ்கக் கூடும். நண்பர், உறவினர் சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். இரத்த அழுத்தம், சளித்தொந்தரவு, இனந்தெரியாத கவலைகள் வந்துப் போகும்.
கன்னிப்பெண்களே! விரக்தி,ஏமாற்றங்களிலிருந்து மீள்வீர்கள். விடுபட்ட பாடத்தில் வெற்றி பெறுவீர்கள். நல்ல வேலை அமையும். நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு நினைத்தவரையே கல்யாணம் முடிப்பீர்கள். மாணவர்களே! பல பாடங்களில் சிவப்பு கோடிடும் அளவிற்கு மதிப்பெண் குறைந்ததே! இனி சக மாணவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெறவேண்டுமென்ற வைராக்கியத்துடன் படிப்பீர்கள். வெற்றி நிச்சயம். ஆசிரியர் பாராட்டுவார்கள். அரசியவாதிகளே! உங்களைப் பற்றிய வதந்திகள் நீங்கும். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள்.
வியாபாரிகளே! மாவு விற்கப்போய் காற்று வந்ததுபோல, தொட்டதெல்லாம் நட்டமானதே! இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்களே! இனி தொலைநோக்குச் சிந்தனையுடன் முதலீடு செய்து லாபம் பார்ப்பீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். வேலையாட்களை நம்பி தொழில் ரகசியங்களை சொல்லிக் கொடுத்தீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். பர்னிச்சர், ஹோட்டல், லாட்ஜ்,ஏற்றுமதி-இறக்குமதி,நீசப்பொருட்களால் ஆதாயமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்தியோகஸ்தர்களே! உங்களைக் குறை கூறிய மேலதிகாரி மாற்றப்படுவார். உங்கள் மேல் சுமத்தப்பட்ட பொய் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கணினி துறையினர்களே! இதைவிட வேறு நல்ல வேலைக்குப் போகலாம் என்றிருந்தாலும், சரியான வாய்ப்பில்லாமல் தவித்தீர்களே! இப்போது கூடுதல் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.
கலைஞர்களே! பட்டிதொட்டியெங்கும் உங்கள் படைப்புகள் பாராட்டு பெறும்.
சின்ன சின்ன சிக்கல்கள், சுகவீனங்கள் இருந்தாலும் பெரிய சாதனைகளை படைக்கத் தூண்டும் வருடமிது.
பரிகாரம்:
அருகிலுள்ள சித்தர்பீடம் சென்று தியானம் செய்து வணங்குங்கள்.
2013 புத்தாண்டு இராசி பலன் : தனுசு!
சகதியில் கல்லை விட்டெறிந்தால் அது தன் மேலேதான் தெறிக்கும், என்பதை உணர்ந்த நீங்கள் கெட்ட நண்பர்களை அறவே ஒதுக்கிவிடுவீர்கள். புத்தாண்டு பிறக்கும் போது ராகு உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடன்பிறந்தவர்களுக்காக எவ்வளவு செய்தும் நம்மை புரிந்து கொள்ளவில்லையே, என்று அவ்வப்போது வருந்தினீர்களே! அந்த நிலை மாறும். பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.
புத்தாண்டு பிறக்கும் போது சனிபகவான் உங்களின் லாப வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணப்புழக்கம் அதிகரிக்கும். இனி திட்டமிட்ட காரியங்கள் தடையில்லாமல் முடியும். புது சொத்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. கல்யாணம், காதுகுத்தி, மஞ்சள் நீராட்டு, கிரகப்பிரவேசம் என பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள்,நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். பழைய சொந்த-பந்தங்கள், நண்பர்கள் மதிப்பார்கள். பிள்ளைகளிடமிருந்த பிடிவாதக்குணம் நீங்கும். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். கோவில் கும்பாபிஷேக திருப்பணி கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். அதிக மைலேஜ் தரக் கூடிய வாகனம் வாங்குவீர்கள்.
மே 28-ந் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண் பழி,ஏமாற்றம், அலைச்சல்,டென்ஷன், வேலைச்சுமை, செறிமானக் கோளாறு என வந்து நீங்கும். உள்மனதில் ஒருவித போராட்டம் எழும்பும். பூர்வீக சொத்து சம்பந்தமாக வழக்குகள் வேண்டாமே. என்னதான் திட்டமிட்டு செயல்பட்டாலும் அந்த காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்துதான் முடிக்க வேண்டி வரும். எதிரிகளில் சிலர் நண்பர்களாவார்கள். குலதெய்வ கோவிலை புதுப்பிப்பீர்கள். தங்க ஆபரணங்கள், வீட்டுப் பத்திரங்களை கவனமாக கையாளுங்கள்.
யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடவேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒருபகுதியை கொடுத்து முடிப்பீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். உறவினர்கள், நண்பர்களுடன் கொஞ்சம் இடைவெளிவிட்டு பழகுவது நல்லது. ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் நுழைவதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். சோர்ந்துக் கிடந்த நீங்கள் உற்சாகமாவீர்கள். எதிலும் ஆர்வம் பிறக்கும். பாதியிலேயே நின்றுபோன வேலைகள் முழுமையடையும். வீட்டில் தாமதமான சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும்.
கணவன்-மனைவிக்குள் இருந்த சந்தேகம், ஈகோ பிரச்னைகள் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். மகளுக்கு இருந்த கூடாப்பழக்கம் விலகும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். தாயாருக்கு இருந்த நெஞ்சு வலி நீங்கும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். அனுபவ அறிவை பயன்படுத்தி சில பிரச்னைகளுக்கு எதார்த்தமான தீர்வு காண்பீர்கள். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தள்ளிப் போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வேற்றுமதத்தினர், மொழியினர் உதவுவார்கள். வழக்கால் பணம் வரும்.
செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும் போது 2-ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள். சகோதர சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்து போங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். முக்கிய பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.
உங்களுக்கு 8-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப்பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம். வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பொறுப்பில்லாத் தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அவர்களின் போக்கிலேயே அவர்களை விட்டுப்பிடிப்பது நல்லது. தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீக சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும்.
யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்வது நல்லதல்ல. எதிலும் அலட்சியமாக இல்லாமல் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அடுத்தவர்களை விமர்சித்துப் பேசுவதை நிறுத்துங்கள். வறட்டு கௌரவத்திற்காக ஆடம்பரச் செலவுகள் செய்துக் கொண்டிருக்காதீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் பாக்கி வைக்காதீர்கள். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். உங்கள் மீது சிலர் பழி சுமத்துவார்கள்.
கன்னிப்பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். தாமதமான கல்யாணம் வருடத்தின் பிற்பகுதியில் நல்ல விதத்தில் முடியும். உங்கள் ரசனைக்கேற்ற மணமகன் வந்தமைவார். மாதவிடாய்க் கோளாறு, தலைச்சுத்தல்,தூக்கமின்மை நீங்கும். புதிய நண்பர்களை நம்பி ஏமாற வேண்டாம். வேலை கிடைக்கும். மாணவர்களே! விளையாட்டுத்தனத்தை ஓரங்கட்டிவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் யாரையும் விமர்சித்துப் பேசவேண்டாம். சகாக்கள் சிலர் உங்களை புகழ்வதை போல இகழ்வார்கள்.
வியாபாரிகளே! பெரிய அளவில் முதலீடுகள் செய்து திணறாமல் அளவாக பணம் போடுங்கள். சந்தை நிலவரம் அறிந்து புது கொள்முதல் செய்யுங்கள். புதிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். கடையை விரிவுப்படுத்தி அழகுபடுத்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் சென்று உங்களை டென்ஷனாக்குவதுடன், விவாதமும் செய்வார்கள். மருந்து,எண்டர்பிரைஸ்,துணி வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் கருத்துவேறுபாட்டால் பிரிவார்கள். புதிய பங்குதாரர்கள் வருவார்கள்.
உத்தியோகஸ்தர்களே! கிடைக்க வேண்டிய பதவியுயர்வு ஏதோ காரணங்களால் தடைபட்டுப்போனதே! இனி பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. அலுவலகப் பிரச்னைகள் மட்டுமல்லாது அதிகாரியின் சொந்த பிரச்னைகளையும் தீர்த்து வைப்பீர்கள். பெரிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள். பணிகளையும் திறம்பட முடித்து எல்லோரையும் வியக்க வைப்பீர்கள். புது வேலை கிடைக்கும். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். கணினி துறையினர்களே! அன்னிய நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் புது வாய்ப்பு கிட்டும்.
கலைஞர்களே! கிடைக்கின்ற வாய்ப்பு எதுவானாலும் ஏற்றுக் கொள்ளப் பாருங்கள்.
இந்த புத்தாண்டு தொடக்கத்தில் சின்ன சின்ன தொந்தரவுகளை தந்தாலும் மையப் பகுதி முதல் எதிர்பாராத பணவரவு, வெற்றிகளை தரக் கூடியதாக அமையும்.
பரிகாரம்:
ஏதேனும் ஒரு பிரதமை திதி நடைபெறும் நாளில் அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள்.
2013 புத்தாண்டு இராசி பலன் : மகரம்!
அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டும் நீங்கள், அன்பின் அடையாளமாக இருப்பவர்கள். வருடம் பிறக்கும் போது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் நிலவி வந்த தொடர்யுத்தமெல்லாம் விலகும். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளை இனி கட்டுப்படுத்துவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவிற்கு பணம் வரும்.
குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக ஏறி இறங்கிய தம்பதியருக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளால் உறவினர்கள்,நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். மகளுக்கு வெகுநாட்களாக தேடி அலைந்த வரன் பார்க்கும் படலம் இப்பொழுது முடியும். வேலையில்லாதவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். ஆரோக்கியம் கூடும். இனி உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள்.
குலதெய்வ கோவிலுக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை உடனே முடிப்பீர்கள். ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைவதால் வீண்பழி, டென்ஷன், விரையம், விரக்தி,ஏமாற்றம்,மறைமுக எதிர்ப்புகள் என வந்து நீங்கும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கணவன்- மனைவிக்குள் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வந்துப் போகும். பணத்தட்டுப்பாட்டை சமார்த்தியமாக சமாளிப்பீர்கள்.
உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். சொத்து சம்பந்த பட்ட வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். புகழ் பெற்ற வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யாருக்காகவும் பைனான்ஸில் பணம் வாங்கித் தரவேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். உங்களின் கையெழுத்திட்ட வங்கிக் காசோலையையும், சொத்துப் பத்திரத்தையும் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள்.
உங்களுக்கு லாப வீட்டில் சுக்ரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். மனைவிவழியில் இருந்த பனிபோர் நீங்கும்.
டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வழக்கு சாதகமாகும். செவ்வாய் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இனி வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். உப்பு விற்க போய் மழை வந்த கதையாய் எதை தொடங்கினாலும் இழப்புகளும், ஏமாற்றங்களும் தானே ஏற்பட்டது இனி அந்த நிலை மாறும் அரைக்குறையாக நின்று போன வேலைகளெல்லாம் முழுமையடையும்.
மனக்கலக்கத்துடன் சோர்ந்துக் கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பழைய கடனையும் பைசல் செய்வீர்கள்-. வீடு, மனை வாங்க முயற்சி செய்வீர்கள்-. சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். உறவினர்கள்,நண்பர்களின் விசேஷங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்தீர்களே! இனி உற்சாகமாக கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளிடமிருந்த பிடிவாதக்குணம் நீங்கும். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
கேது 4-ம் வீட்டில் நிற்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் வெடிக்கும். தாய்மாமன் வகையில் செலவுகள் வந்துப் போகும். வீடு கட்ட முடிவெடுத்துவிட்டால் தேவைப்படும் பணத்தை கையில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். யாருக்காகவும் பைனான்ஸில் பணம் வாங்கித் தரவேண்டாம்.
அவ்வப்போது எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். மூட்டு வலி, ஒற்றை தலை வலி, இரத்த சோகை வரக்கூடும். ஆனால் 10-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் பிரச்சனைகளை கண்டு அஞ்சாமல் பதிலடி கொடுக்கும் அளவிற்கு மன தைரியம் பிறக்கும். பிரபலங்கள்,நாடாளுபவர்களின் உதவியுண்டு. அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி முழு மூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு இதோ,அதோ என்று இழுத்தடித்தவர்கள் இப்பொழுது திருப்பித் தருவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழியும் வரக்கூடும்.
வருடம் முடியும் வரை உங்கள் ராசிநாதனான சனிபகவான் ராசிக்கு 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. பணபலம் கூடும். புது பதவிகள்,பொறுப்புகள் தேடி வரும். பொது விழாக்களை தலைமையேற்று நடத்துவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடந்த உங்கள் மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்துத் தகராறு தீரும். மறைமுகமாக செயல்பட்டவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். உடல் அசதி, மனசோர்வு வரும். பீரோ சாவியை அடிக்கடி மறந்து வைத்துவிடுவீர்கள். ஊருக்கு செல்லும் முன் சமையலறையில் கேஸ் இணைப்பை சரிபார்த்து செல்லுங்கள்.
கன்னிப்பெண்களே! மனதில் மறைக்கத்தெரியாமல் வெளிப்படையாக பேசி விவகாரங்களில் சிக்கித்தவித்தீர்களே! இனி இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவீர்கள். காத்திருந்ததற்கேற்ப நல்ல கணவர் வந்தமைவார். மாணவர்களே! உங்களால்தான் குடும்பம் தலைநிமிரும் என்பதை உணர்ந்து படிக்கப்பாருங்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்குங்கள். கடைசி நேரத்தில் படிப்பதை தவிர்த்து விடுங்கள். அரசியல்வாதிகளே! உட்கட்சி பூசல், எதிர்கட்சியைப் பற்றி விமர்சனம் என்று நேரத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்படப்பாருங்கள்.
வியாபாரிகளே! எதைத் தொட்டாலும் நட்டத்தில் முடிந்ததே! இனி புதுப் புது திட்டங்களால் போட்டியாளர்களை திணறடிப்பீர்கள். தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத்தீர்ப்பீர்கள். பழைய வேலையாட்களை மாற்றிவிட்டு புதியவர்களை நியமித்தாலும் அவர்கள் மீது ஒரு கண் வையுங்கள். வாடிக்கையாளர்களை கவர சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். கொடுக்கல்-வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் இணைவார்கள்.
உத்யோகஸ்தர்களே! பதவி உயர்வு கிடைக்காமல் தவித்தீர்களே! அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! சக ஊழியர்களாலும் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப் பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். எதிர்பார்த்த பதவியுயர்வு,சம்பள உயர்வு எல்லாம் இப்பொழுது கிட்டும். சக ஊழியர்கள் உங்களிடம் அன்பாக பேசினாலும் மேலதிகாரியிடம் உங்களை புகார் செய்து கொண்டுதான் இருப்பார்கள். கணினி துறையினர்களுக்கு புது வாய்ப்புகளும் தேடி வரும்.
கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனம் உங்களை அழைத்துப் பேசும். கிடைக்கும் வாய்ப்புகளையும் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
ஆரம்பத்தில் பணவரவையும், வெற்றியையும் தாந்தாலும் பிற்பகுதியில் அலைச்சலையும், செலவினங்களையும் தரும் வருடமிது.
பரிகாரம்:
வெள்ளிக் கிழமையில் நவக்கிரத்தில் உள்ள சுக்ரனை வணங்குங்கள்.
2013 புத்தாண்டு இராசி பலன் : கும்பம்!
அமைச்சராக இருந்தாலும் ஆண்டவனாக இருந்தாலும் தவறை தட்டிக் கேட்பவர்களே! வருடம் பிறக்கும் போது 3-ம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார். ஆனால் இளைய சகோதரருடன் பனிப்போர் வந்து நீங்கும். கொஞ்சம் அனுசரித்துப் போங்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.
பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். பிதுர் வழிச் சொத்தை அடைவதில் இருந்த தடைகள் விலகும். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். அவரின் உடல் நிலை சீராகும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பிரபலங்கள், தொழிலதிபர்களின் நட்பு கிட்டும். அவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கமாவீர்கள்.
ஆனால் வருடம் முழுவதும் 9-ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் போய் நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். சித்தர்கள், ஆன்மீகவாதிகளின் ஆசி கிட்டும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். ஆனால் தந்தையாருடன் மனஸ்தாபங்கள், அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைள் வந்து போகும்.
உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கனிவான பேச்சு வேலைக்காகாது, இனி கறாராக தான் பேச வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். ஏதாவது காரியமாக வேண்டுமென்றால் உங்கள் காலை பிடிப்பதும், கையைப்பிடிப்பதுமாக இருந்தவர்களையெல்லாம் ஒத்துக்கித்தள்ளுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருவாய் அதிகரிக்கும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும். கணவன் மனைவிக்குள் பாசம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.
பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். என்றாலும் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். கல்யாணம், கிரக பிரவேசம், சீமந்தம் என வீடு களை கட்டும். வற்றிய பணப்பை நிரம்பும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் இனி தேடி வருவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும் உண்டு. விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் இப்போது முடியும். வருடம் தொடங்கும் போது செவ்வாய் 12-ம் வீட்டில் நிற்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். என்றாலும் அவர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம்.
வருடம் முடியும் வரை உங்கள் ராசிநாதன் சனிபகவான் 9-ம் வீட்டில் உச்சம் பெற்று வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும்.
மகளின் கல்யாணத்தை வெகு விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள், நண்பர்களின் சுய ரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். உங்களைத் தாழ்த்திப் பேசியவர்கள் திருந்துவார்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது வேலை அமையும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். ஆனால் தந்தைக்கு நெஞ்சு வலி, அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.
மே 28-ந் தேதி வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் இனம்புரியாத கவலைகள் வந்துப் போகும்-. தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். அவருக்கு கை, கால் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். புதியவர்களை நம்பி பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதிக்காதீர்கள். சித்தர்களை சந்தித்து அருள் ஆசி பெறுவீர்கள்.
அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். வறண்டிருந்த பணப்பை கொஞ்சம் நிரம்ப ஆரம்பிக்கும். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளால் மதிப்பு, மரியாதைக் கூடும். மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடிவரும்.
மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். சொத்து விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்களுக்கு அதிரடியான தீர்வு காண்பீர்கள். மூத்த சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. அடிக்கடி தொந்தரவு தந்த வாகனம் இனி சீராக ஓடும். தேங்கிக்கிடந்த வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
கன்னிப்பெண்களே! நல்லவர்களைப் போல் சிலர் நடித்து ஏமாற்ற முயற்சி செய்வார்கள். காதல் கைக்கூடும். பெற்றோரின் அறிவுரைகள் இப்போது கசந்தாலும் பின்னர் இனிக்கும். திருமணம் கொஞ்சம் தாமதமாகி முடியும். விடுபட்ட பாடத்தை முடித்து உங்கள் தகுதிக் கேற்ப நல்ல வேலையில் சேருவீர்கள். ஆடை அணிகலன்கள் சேரும். மாணவர்களே! தேர்வில் வெற்றியுண்டு என்று தப்புக்கணக்கு போடாமல், சதா படித்து, எழுதி பார்ப்பது நல்லது. எதிர்பார்த்தபடி நல்ல கோர்ஸில் சேருவீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். உயர்கல்வியில் வெற்றியுண்டு. அரசியல்வாதிகளே! உங்களின் நடவடிக்கைகளை தலைமை உற்று நோக்கும். உட்கட்சிப் பூசலில் தள்ளியே இருங்கள்.
வியாபாரிகளே! கடையை விரிவுபடுத்தி, பெரிய முதலீடுகளை போட்டு நட்டப்பட்டீர்களே! இனி வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். நீண்ட நாளாக நினைத்திருந்த மாற்றங்களை உடனே செய்வீர்கள். வானொலி விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்களால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மற்றவர்களின் ஆலோசனையை ஒதுக்கித் தள்ளுங்கள். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்துங்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். மெடிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! உங்களை கசக்கிப் பிழிந்து, உருகுலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப் போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். இனி அநாவசியமாக விடுப்பு எடுக்கமாட்டீர்கள். அவ்வப்போது மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேரிடும். சக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி மேலதிகாரியிடம் குறை கூறுவார்கள். அலுவலகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் உஷாராக இருங்கள். கணினி துறையினர்களே! தற்சமயம் நீங்கள் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து தலைமை அலுவலத்திற்கு மாற்றப்படுவீர்கள். சம்பளம் உயரும்.
கலைஞர்களே! உங்களுக்கு வாய்ப்புத் தருவதாக சில நிறுவனங்கள் இழுத்தடிக்கும். வீண் கிசுகிசுக்களும், புகார்களும் வரும். என்றாலும் மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள்.
அலைச்சலும், பணப்பற்றாக்குறையும் முற்பகுதியில் இருந்தாலும் மையப் பகுதி முதல் திடீர் திருப்பங்கள் தரும் வருடமாகும்.
பரிகாரம்:
செவ்வாய் கிழமையில் ராகு காலம் நேரத்தில் ஸ்ரீதுர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வணங்குங்கள்.
2013 புத்தாண்டு இராசி பலன் : மீனம்!
மறப்போம் மன்னிப்போம் என்றிருக்கும் நீங்கள், சண்டைக்காரர்களைக் கூட சந்தோஷப்படுத்துவதில் வல்லவர்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் சுக்ரன் வலுவாக நிற்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். விலகியிருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தடைப்பட்ட கல்யாணம் முடியும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள்.
வங்கிக் கடனுக்காக காத்திருந்து, வீடு கட்டும் பணியும் பாதியிலேயே நின்று போனதே! இனி பல வழிகளிலும் உதவிகள் கிடைக்கும். சமையலறையை நவீன மயமாக்குவீர்கள். விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். அவர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில் தவறில்லை.
வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். தாய்வழியில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களின் உதவி கிடைக்கும். இடவசதியில்லாமல் தவிர்த்த கொண்டிருந்த வீட்டிலிருந்து காற்றோட்டம், தண்ணீர் வசதி அதிகமுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர், வீட்டில் குடி நீர், கழிவு நீர் பிரச்னைகள் தீரும். நிலுவையில் இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வேற்று இனத்தவர்களின் ஆதரவு கிட்டும். குலதெய்வ கோவிலை புதுப்பிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.
உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். மனைவிவழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.
மே 28-ந் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் இலக்கை எட்டிப் பிடிக்க கடுமையாக போராட வேண்டி வரும். சுபச் செலவுகளும், திடீர் பயணங்களும் அதிகரிக்கும். ஆனால் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். லேசான தலை சுற்றல், சலிப்பு, முன்கோபம், சில காரியங்களில் தடைகள் வந்துச் செல்லும். கல்யாணம்,சீமந்தம்,காதுகுத்து போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக் கட்டும். மனைவி, பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்.
மகனுக்கு பல இடத்தில் வரன் பார்த்தும் நமக்கு ஏற்ற சம்பந்தம் இல்லையே என வருந்தினீர்களே! இனி நல்ல மணப்பெண் அமைவார். அவரின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. உறவினர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை போராடி பைசல் செய்வீர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை முழுமையாக நம்பி அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் சிலர் உங்களுக்கு உதவ முன் வருவார்கள்.
ஆனால் மே 29-ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் மனஉளைச்சல், மறைமுக எதிர்ப்பு, வீண் விமர்சனம், மூட்டு வலி, சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் உரசல்கள் வரும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கடன் தொலைகளை நினைத்து வருந்துவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள்.
வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ம் வீட்டில் கேது நிற்பதால் பேச்சில் காரம் வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். தங்க நகைகளை யாரிடமும் இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். அயல்நாடு செல்ல விசா தாமதமாக கிடைக்கும். வரும்.
இந்தாண்டு முழுக்க ராசிக்கு 8-ம் வீட்டிலேயே ராகுவும் நிற்பதால் கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவது நல்லது. உறவினர்கள் சிலர் உங்களுக்குள் வீண் வம்புசண்டையை ஏற்படுத்தக்கூடும். காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அலைப் பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.
வருடம் முடியும் வரை அஷ்டமத்துச் சனி தொடர்வதால் விபத்துகள், ஏமாற்றங்கள், ஈகோ பிரச்னையால் கணவன்-மனைவி பிரிவு, பணயிழப்பு, வீண் பழி, வழக்குகள் வந்து நீங்கும். நீரிழிவு நோய் வர வாய்ப்பிருக்கிறது. எனவே தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். முகப்பரு, தோலில் நமைச்சல், கனவுத் தொல்லை வந்து நீங்கும். பெற்றோரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியை கொஞ்சம் போராடி முடிப்பீர்கள். மாணவர்களே! மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. பெற்றோரின் அறிவுரையை அலட்சியப்படுத்தாதீர்கள். கணிதம், அறிவியல் பாடத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்கி படியுங்கள். தேர்வில் மதிப்பெண் உயரும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் இருக்கும் சிலரே உங்கள் காலை வாரப்பார்ப்பார்கள். கவனமாக இருங்கள். தலைமையிடம் உங்களைப் பற்றி சிலர் புகார் பட்டியல் வாசிப்பார்கள்.
வியாபாரிகளே! பக்கத்துக் கடைக்காரரைப் பார்த்து பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த லாபத்தை குறைத்து விற்பனை செய்ய வேண்டி வரும். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். திடீரென்று அறிமுகமாகுபவர்கள் நயமாகப் பேசுகிறார்கள் என்று நம்பி பெரிய தொகையை கடனாக தர வேண்டாம். மே மாதம் முதல் கணிசமாக லாபம் உயரும். உணவு, புரோக்கரேஜ், கமிசன், எலக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும்.
உத்தியோகஸ்தர்களே! மேலதிகாரியால் அவ்வப்போது மன உளைச்சல் வந்தாலும், உங்களை நம்பித்தான் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அலுவலக சூட்சுமங்கள் அத்துபடியாகும். காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைந்து முடிக்கப்பாருங்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விருப்பமற்ற இடமாற்றம் உண்டு. வருட பிற்பகுதியில் பதவியுயரும்.
கலைஞர்களே! புதிய வாய்ப்புகள் வரும். ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும் மற்றொரு புறம் கடின உழைப்பால் சாதித்துக் காட்டுவீர்கள்.
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதுடன் தன்நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய வருடமிது.
பரிகாரம்:
திருவோணம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று துளிசி மாலை அணிவித்து வணங்குங்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.