குவென்டின் டொரன்டினோ மற்றும் லத்தீன் அமெரிக்க கேங்ஸ்டர் படங்களில் அடிநாதமாக இருக்கும் வன்முறையின் அழகியலில் மனதை பறி கொடுத்தவர் போலிருக்கிறது இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. நேரான கதை, நீதியை நிலைநாட்டும் ஹீரோ, பெண்மையின் நிறைகுடமான ஹீரோயின், கண்ணியத்தை போதிக்கும் காட்சிகள் என நாகரீக ரசிகர்கள் எதிர்பார்க்கும் எதுவும் ஆரண்யகாண்டத்தில் இல்லை. அவர்கள் இந்தப் படம் ஓடும் திரையரங்குப் பக்கம் செல்லாமலிருப்பது நல்லது.
தமிழுக்கு பலவகைகளில் ஆரண்யகாண்டம் முக்கியமான படம். முதலாவதாக திட்டவட்டமான கதை என்று இதில் எதுவுமில்லை. அதாவது பிரதான கதை. பலரின் கதைகள் பின்னிப் பிணைந்த கொலாஜ் இது. வானம் மாதிரியா என்றால் அப்படியும் இல்லை. இது வேறு. திட்டவட்டமான கதை இல்லை என்பதால் ஹீரோ, ஹீரோயின் போன்ற உளுத்துப் போன வகை மாதிரிகளும் இல்லை. அசட்டு காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் எதுவுமில்லை.
நடுத்தர வயதை கடந்த ஐயா என்றழைக்கப்படும் சிங்கம் பெருமாள் - ஜாக்கி ஷெராப் - ஒரு கேங்ஸ்டர். வயதானதால் ரிஸ்க்கான வேலைகளை அவர் தொடுவதில்லை. அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பசுபதி - சம்பத் - டொக்காயிட்டீங்களா என்று ஒருமுறை கேட்கிறார். இந்த ஒரே காரணத்துக்காக அவரை போட்டுத்தள்ள சொல்கிறார் சிங்கம் பெருமாள். அவரது சதியிலிருந்து பசுபதி தப்பிக்கிறார். அதனால் அவரது மனைவியை சிங்கம் பெருமாளின் ஆட்கள் பிடித்துக் கொள்கிறார்கள். இது ஒரு ட்ராக்.
நடிக்க வாய்ப்பு வாங்கித் தர்றேன் என்று பேத்தி வயதில் சுப்பு என்ற பெண்ணை அழைத்து வந்து சிங்கம் பெருமாள் தனது ஆசைக்கு வைத்துக் கொண்டிருக்கிறார். வயது காரணமாக படுக்கையில் அரைக் கிணறே சிங்கம் பெருமாளால் தாண்ட முடிகிறது. முடியலைன்னா பரவாயில்லை என்று அந்தப் பெண் சொன்னாலும் அடிஉதைதான். அவளைப் பொறுத்தவரை சிங்கம் பெருமாளின் நிழலில் வசிப்பது நரகம். இந்நிலையில் அங்கு எடுபிடி வேலை செய்யும் பெண்மை நிரம்பிய சப்பைக்கும் - ரவி கிருஷ்ணா - அவளுக்கும் இடையில் உறவு ஏற்படுகிறது. இருவரும் சிங்கம் பெருமாளிடமிருந்தே பணத்தை திருடி தப்பிக்க நினைப்பது இன்னொரு ட்ராக்.
வாழ்ந்து கெட்ட கிராமத்து ஜமீன்தார் ஒருவர் தனது எட்டு வயது மகனுடன் நகரத்துக்கு சேவல் சண்டைக்காக தனது சேவலுடன் வருகிறார். வருகிற இடத்தில் கோவிந்தராஜன் என்கிற கேங்ஸ்டாpன் கையாளுடன் பழக நேர்கிறது. அவனிடம் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவிந்தராஜனுக்கான போதைப் பொருள் இருக்கிறது. போனமுறை கடத்தி வந்து கொடுத்ததற்கு பத்தாயிரம்தான் தந்தாங்க என்று பசுபதிக்கு ஐம்பது லட்சத்துக்கு பொருளை கைமாற்றி வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறான் கையாள். இந்த டீலில் இருந்து சிங்க பெருமாள் ஒதுங்கியிருக்கலாம் என்று சொன்னதனால்தான் பசுபதி அவரை டொக்காயிட்டீங்களா என்று கேட்கிறான். அசந்தர்ப்பமாக போதைப் பொருள் ஜமீன்தார் வசம் கிடைக்கிறது. இந்த போதைப் பொருளை கோவிந்தராஜனிடம் ஒப்படைத்தால் மட்டுமே அவனிடமிருந்து பசுபதி தப்பிக்க முடியும். அதே நேரம் இதனை தந்துதான் சிங்கம் பெருமாளிடமிருந்து அவனது மனைவியையும் மீட்டாக வேண்டும்.
நடுத்தர வயதை கடந்த கேங்ஸ்டராக ஜாக்கிஷெராப். அடக்கமான குரலும், நையாண்டியான பாடிலாங்குவேஜுமாக... அட்டகாசம். அதேபோல் அந்த ஜமீன்தார். வெகுளியான பேச்சும் வில்லங்கமான நடத்தையுமாக அசர வைக்கிறார். மற்றவர்களும் கொடுத்த பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள்.
ஆரண்யகாண்டத்தின் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் தனியே குறிப்பிட வேண்டியவை. முக்கியமாக பார்த்து அனுபவிக்க வேண்டியவை. அதேபோல் சென்னையில் இதுவரை கேமரா பார்த்திராத இடங்களாக படமாக்கியிருக்கிறார்கள்.
படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால் படம் நெடுக பழையப் பாடல்கள் ரேடியோவிலிருந்தும், கார் ஸ்டீரியோவிலிருந்தும் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. இப்படிதானே நாமும் பாடல்களை நடைமுறை வாழ்வில் அனுபவப்படுகிறேhம். பின்னணி இசை படத்துக்கு தனிச்சிறப்பான வண்ணத்தை தருகிறது. ஜமீன்தாரும் அவரது மகனும் சேவலை பறிகொடுத்துவிட்டு செல்லும் போது, இன் தி மூட் ஃபார் லவ் படத்தை நினைவுப்படுத்தும் இசைக்கோவை வருகிறது... அற்புதம்.
ஆன்டி காண்டம் என்று சொல்லும் அளவுக்கு ஆன்டிகளை மடக்குவது பற்றி பேசுகிறார்கள். சப்பையும், சுப்புவும் தனிமையில் தப்பிப்பதைப் பற்றி திட்டம் போடும் காட்சியில் அவர்களின் பேச்சும், மாடுலேஷனும் குழந்தை நாடகம் போலிருக்கிறது. இந்த இரண்டிற்கும் படத்தின் இறுதியில் அர்த்தம் கொடுத்திருந்தாலும் இன்னும் கவனமாக மெருகேற்றியிருக்கலாம்.
சப்பையை கொன்றுவிட்டு பணத்துடன் சுப்பு கிளம்புகிறாள். அவளைப் பொறுத்தவரை சப்பையும் ஒரு ஆம்பளைதான்... எல்லா ஆம்பளைகளும் சப்பைதான். நாகரீக ரசிகர்களை இந்தக் காட்சி துணுக்குற வைக்கும். இப்படியொருத்தியை லாரி ஏற்றியாவது கொன்றிருக்கலாமே என்று. ஒரு காட்சி இப்படிதான் தொடங்க வேண்டும், இப்படிதான் இருக்க வேண்டும் என்ற ஆகம விதிகளையெல்லாம் அடித்து துhளாக்கியிருக்கிறார்கள்.
எது தேவையோ அதுதான் தர்மம் என்ற சாணக்கியனின் வாக்குடன் படம் முடிகிறது. இதுதான் படத்தின் மையச் செய்தி. ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை. அந்த தேவைக்காக எதையும் செய்யலாம். அப்படி செய்வதுதான் தர்மம், கொலையும்கூட.
அரைகுறை பிரசவம் என்றாலும் ஆரண்யகாண்டம் வன்முறையின் அழகியலை சொன்ன முதல் தமிழ்ப் படம். தியாகராஜன் குமாரராஜாவுக்கும், தயாரித்த சரணுக்கும் ஒரு வார்ம் வெல்கம்.
//ஆரண்யகாண்டம் வன்முறையின் அழகியலை சொன்ன முதல் தமிழ்ப் படம்.//
ReplyDeleteதமிழ் சினிமாவை இன்னொரு பாதைக்கு இட்டுச்செல்லுமா? எப்பிடி இருந்தாலும் , இனி வரும் காலங்களில் இந்த பார்மூலாவை வைத்து 4 , 5 திரைப்படங்கள் நிச்சயம் வரும் என நம்பலாம்...